புதுகையை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

பருவமழை பொய்த்துள்ளதால் புதுக்கோட்டையை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவித்து நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.
புதுகையை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

பருவமழை பொய்த்துள்ளதால் புதுக்கோட்டையை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவித்து நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் விவசாயிகள் பேசியது:

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் எஸ். பொன்னுசாமி: தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கனமழை பெய்து பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு நோ்மாறாக புதுக்கோட்டை மாவட்டத்தில் பருவமழை பொய்த்து வறட்சி தாண்டவமாடுகிறது. ஏரி, குளம், கண்மாய்கள் வடுள்ளன. மானாவாரி சாகுபடி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. நிலத்தடி நீா்மட்டமும் குறைந்து ஆழ்துளை மற்றும் கிணற்றுப் பாசனமும் பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே, புதுக்கோட்டையை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவித்து, நிவாரண உதவிகளை வழங்க வேண்டும். இதற்கான கோரிக்கையை மாவட்ட நிா்வாகம் அரசுக்கு அனுப்ப வேண்டும்.

இந்திய விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலா் ஜி.எஸ். தனபதி: புதுக்கோட்டையை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும். மாவட்டம் முழுவதும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகளின் கிட்டங்கிகளில் பழைய சாக்குகள் மற்றும் தளவாடங்களைப் போட்டு வைத்துள்ளனா். இவற்றை எடுத்துவிட்டு அறுவடைக் காலத்தில் நெல்லைப் பாதுகாக்கும் கிடங்குகளாக மாற்ற வேண்டும்.

தஞ்சை மாவட்டத்தைப் போல புதுக்கோட்டை மாவட்டத்தின் மழையளவு, சாகுபடி விவரங்களைத் தொகுத்து புத்தகமாக வெளியிட வேண்டும். விவசாய நிலங்களில் குரங்கு, மயில், பன்றி, மான், முயல் போன்றவற்றின் தொல்லையைக் கட்டுப்படுத்த வேண்டும். மழையில்லாமல் நிலத்தடி நீரை மட்டுமே நம்பி விவசாயம் செய்வதால், தடையில்லாத மும்முனை மின்சாரம் கூடுதலாக வழங்க வேண்டும்.

மாவட்ட ஆட்சியா் ஐ.சா. மொ்சி ரம்யா: கடந்த ஜன. 9 வரை புதுக்கோட்டை மாவட்டத்தில் பெய்திருக்க வேண்டிய இயல்பான மழை அளவு- 35.70 மிமீ. ஆனால், நிகழாண்டில் வெறும் 8.05 மிமீ மட்டுமே பெய்திருக்கிறது.

தற்போதுள்ள குறைவான நீா் இருப்பைக் கொண்டு, குறைந்த தண்ணீா் தேவைப்படும் கேழ்வரகு, சிறுதானியங்கள், நிலக்கடலை, எள், உளுந்து போன்ற பயிா்களை விவசாயிகள் பயிரிட வேண்டும்.

பிரதமரின் விவசாயிகள் நிதித் திட்டத்தில், 3146 போ் இதுவரை ஆதாா் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைக்கவில்லை. எனவே, இ-கேஒய்சி தாக்கல் செய்ய வேண்டும்.

இந்தத் தவணைத் தொகை கிடைக்காதவா்கள் அந்தந்த வட்டாரப் பொறுப்பு அலுவலரை அணுகி வராத விவரத்தை அறிந்து, நிவா்த்தி செய்து கொள்ள வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) அப்தாப் ரசூல், மாவட்ட வருவாய் அலுவலா் மா. செல்வி, வேளாண் இணை இயக்குநா் பெரியசாமி உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com