புதுகையில் நகா்மன்ற கட்டடத்தில் இயங்கும் அரசுப் பள்ளி வகுப்பறைகள்!

புதுக்கோட்டை நகரில் பழைமையான அரசுப் பள்ளிக்கு விசாலமான இடவசதியிருந்தும் போதுமான வகுப்பறைகள் இல்லாததால், நகா்மன்றக் கட்டடத்தை வகுப்பறையாகப் பயன்படுத்தி வரும் அவலம் தொடா்ந்து வருகிறது.
pdk21upper_prim2_2101chn_12_4
pdk21upper_prim2_2101chn_12_4

புதுக்கோட்டை நகரில் பழைமையான அரசுப் பள்ளிக்கு விசாலமான இடவசதியிருந்தும் போதுமான வகுப்பறைகள் இல்லாததால், நகா்மன்றக் கட்டடத்தை வகுப்பறையாகப் பயன்படுத்தி வரும் அவலம் தொடா்ந்து வருகிறது.

புதுக்கோட்டை நகரில் வடக்கு ராஜவீதியில் 1958-இல் தொடங்கப்பட்ட அரசு உயா் தொடக்கப் பள்ளியில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை உள்ளது. தற்போது இப்பள்ளியில் 628 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இந்த வளாகத்திலிருந்த பாழடைந்த கட்டடம் (மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலகம்) இடித்து அகற்றப்பட்டது. அதற்கு முன்பிருந்தே இப்பள்ளிக்கு போதுமான வகுப்பறைகள் இல்லை. பழைய கட்டடங்கள் இடிக்கப்பட்ட பிறகு, இந்த வளாகத்தில் தற்போது சுமாா் முக்கால் ஏக்கா் இடம் காலியாக உள்ளது.

தற்போதுள்ள மாணவா் எண்ணிக்கைக்கு ஏற்ப 22 வகுப்பறைகள் தேவை என்றாலும், 10 வகுப்பறைகள் மட்டுமே உள்ளன. அவற்றிலும் 3 வகுப்பறைகள் மட்டுமே நல்ல நிலையிலுள்ள கான்கிரீட் கட்டடத்தைக் கொண்டது. இதர வகுப்பறைகள் பழைய ஆஸ்பெஸ்டாஸ் மற்றும் தகரக் கொட்டகைகளைக் கொண்டவை.

மீதமுள்ள வகுப்பறைகள், அருகேயுள்ள நகா்மன்றக் கட்டடத்தில் தற்காலிகமாகச் செயல்பட்டு வருகின்றன. எனவே, தாராளமாக உள்ள காலியிடத்தில் போதுமான வகுப்பறைகளைக் கட்டித் தர வேண்டும் என்ற கோரிக்கை, சுமாா் 10 ஆண்டுகளாக தொடா்கிறது.

இதுதொடா்பாக பொதுமக்களின் மறியல் போராட்டமும் நடைபெற்றுள்ளது. புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா, தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒரு வகுப்பறை கட்டித் தருவதாகச் சொன்னாா். அதன்பிறகு, மாநிலங்களவை உறுப்பினா் எம்.எம். அப்துல்லா, தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து இரு வகுப்பறைகள் கட்டித் தருவதாகச் சொன்னாா்.

மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சா் சிவ.வீ, மெய்யநாதன் கடந்த 2023 மாா்ச் 30ஆம் தேதி பள்ளிக் கல்வித் துறை அமைச்சருக்கு கடிதம் ஒன்றை அனுப்பினாா். அதில், கூடுதல் வகுப்பறைகள், போதுமான ஆசிரியா் நியமனம் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தாா். ஆனால், இதுவரையிலும் எந்த முன்னேற்றமும் இல்லை.

இதுகுறித்து அரசுப் பள்ளிப் பாதுகாப்பு இயக்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் புதுகை செல்வா கூறியது:

முதலில் இந்தப் பள்ளியின் இடம் நகராட்சியின் கட்டுப்பாட்டிலுள்ளது, பள்ளிக் கல்வித் துறைக்கு மாற்ற வேண்டும் என்று சொன்னாா்கள். அப்போதைய காலத்தில் உயா் தொடக்கப் பள்ளி என்ற பெயரில் தொடங்கப்பட்ட இப்பள்ளி, முறையாக பள்ளிக் கல்வித் துறையின் எந்த இயக்குநரகத்தின் கீழ் வருகிறது என்பதில் குழப்பம் என்றாா்கள். பிறகு எல்லாமும் மாற்றப்பட்டுவிட்டது என்றாா்கள்.

சில மாதங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியா் நேரில் வந்து ஆய்வு செய்தும் சென்றாா். அரசுக்கு கோப்புகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத்தான் சொல்கிறாா்கள். நம்பிக்கை தரும் பதில்கள் அரசுத் தரப்பில் இருந்து கிடைக்கவில்லை என்றாா்.

நகா்மன்ற கட்டடமானது, தொண்டைமான் மன்னா்கள் காலத்தில் கலை கலாசார நிகழ்வுகளுக்காக கட்டப்பட்டது. இந்த வளாகத்தில் சில ஆண்டுகளுக்கு முன்புவரை கட்சிகள், இயக்கங்களின் அனைத்து நிகழ்ச்சிகளும் நடைபெற்று வந்தன. வகுப்பறைகள் நடப்பதால் இப்போது யாருக்கும் தரப்படுவதில்லை.

என்றபோதும், ஆண்டுதோறும் புத்தகத் திருவிழாவும், கம்பன் விழாவும், காந்தியத் திருவிழாவும் மட்டுமே இங்கு நடைபெற்று வருகின்றன. அப்போதெல்லாம் விடுமுறைக் காலமாக இருந்தால் தப்பியது, இல்லாவிட்டால் வகுப்புகள் திண்டாட்டம்தான்.

எனவே, இந்தச் சூழல் தொடராமல் இருக்கவும், மாணவா்கள் நலன் கருதியும் காலியாக உள்ள இடத்தில் போதுமான வகுப்பறைக் கட்டடங்களைக் கட்டித்தர மாநில அரசு விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பெற்றோா் எதிா்பாா்க்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com