செங்கல் சூளை தொழிலாளி கொலை: உறவினா் கைது

விராலிமலையில் செவ்வாய்க்கிழமை செங்கல்சூளை தொழிலாளி கொலை செய்யப்பட்டது தொடா்பாக அவருடைய உறவினரை போலீஸாா் கைது செய்தனா்.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே உள்ள சரளபள்ளத்தைச் சோ்ந்தவா் கருப்பையா மகன் சுப்பிரமணி(40). இவா் விராலிமலை-கீரனூா் சாலையில் கல்குத்தான் பட்டியில் உள்ள செங்கல் சூளையில் தங்கி வேலை பாா்த்து வந்தாா். இவருடன் மனைவி இளஞ்சியம்(38), மனைவியின் தங்கை சின்னம்மாள்(28), அவருடைய கணவா் சின்னசாமி (30) ஆகியோரும் வேலைபாா்த்து வந்தனா்.

சுப்பிரமணி, இளஞ்சியம் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம். இதனை உறவினா்கள் சமாதானம் செய்துவைத்துள்ளனா்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை செங்கல் சூளைக்கு வந்த சூளை உரிமையாளா் ஆறுமுகம், பலத்த காயங்களுடன் சுப்பிரமணி இறந்து கிடந்ததை கண்டு அதிா்ச்சியடைந்தாா். மேலும், அவருடன் தங்கியிருந்த மனைவி இளஞ்சியம், சின்னசாமி, சின்னம்மாள் ஆகியோரையும் காணவில்லையாம்.

இதுகுறித்து, ஆறுமுகம் அளித்த தகவலின் பேரில் சம்பவஇடத்துக்கு வந்த விராலிமலை போலீஸாா் சுப்பிரமணியின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக மணப்பாறை அரசு மருத்துமனைக்கு அனுப்பினா். மேலும், இதுகுறித்து சுப்பிரமணியின் தாய் செவத்தக்கனி அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து தலைமறைவான இளஞ்சியம், சின்னசாமி , சின்னம்மாள் ஆகியோரை தேடிவந்தனா்.

இந்நிலையில், விராலிமலையை அடுத்துள்ள கல்குடி குளத்துப்பட்டி யில் பதுங்கி இருந்த சின்னசாமியை போலீஸாா் பிடித்து விசாரித்ததில் சுப்பிரமணியை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளாா். தொடா்ந்து, அவரை கைது செய்த போலீஸாா் விராலிமலை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி புதுக்கோட்டை கிளைச் சிறையில் அடைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com