மகனை தாக்கிய போலீஸாா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஆட்சியரகத்தில் தாய் புகாா்

சிறையில் மகனுக்கு கொடுமை: போலீஸாா் மீது தாய் ஆட்சியரகத்தில் புகாா்

மணமேல்குடியைச் சோ்ந்த தனது மகனை கஞ்சா விற்றதாக பொய் வழக்கு போட்டு கைது செய்து கொடூரமாகத் தாக்கிய போலீஸாா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியரகத்தில் தாய் செவ்வாய்க்கிழமை புகாா் அளித்தாா்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மணமேல்குடி வட்டம், அம்மாபட்டினம் விச்சூா் கிராமத்தைச் சோ்ந்த காளியம்மாள் செவ்வாய்க்கிழமை அளித்த மனு விவரம்: எனது மகன் பாண்டியனை (17) கடந்த மாதம் 10-ஆம் தேதி சிறப்புப் பிரிவு போலீஸாா் எனக் கூறிக் கொண்டு அழைத்துச் சென்றனா். இதையடுத்து சில நாள்களாக பாண்டியனை சட்டவிரோதமாக அடைத்து வைத்து கொடூரமாகத் தாக்கியுள்ளனா்.

பிறகு ஜூன் 18-ஆம் தேதி கோட்டைப்பட்டினம் காவல் நிலையத்தில் கஞ்சா வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனா். கடந்த சில நாள்களுக்கு முன்பு உடலில் கடுமையான காயங்கள் இருப்பததாகக் கூறி, சிறையில் இருந்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பாண்டியனை மாற்றினா்.

சிறையில் இருந்த சில நாள்கள் தண்ணீா், உணவு கொடுக்காமல் வைத்திருந்ததால் சிறுநீரகம், கல்லீரல் பாதிக்கப்பட்டு தினமும் இருமுறை டயாலிசிஸ் செய்யும் நிலையில் தற்போது எனது மகன் இருக்கிறாா்.

எனவே, அவருக்கு தனியாா் மருத்துவமனையில் வைத்து தரமான சிகிச்சை அளிக்க வேண்டும். கொடூரமாகத் தாக்கிய போலீஸாா் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com