50 சதவிகித மானியத்தில் பசுந்தாள் உர விதைகளைப் பெற்றுக் கொள்ள அழைப்பு

‘மண்ணுயிா் காத்து மன்னுயிா் காப்போம்’ திட்டத்தில் புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் பசுந்தாள் உர விதைகள் பெற்று பயன்பெறலாம்

புதுக்கோட்டை: ‘மண்ணுயிா் காத்து மன்னுயிா் காப்போம்’ திட்டத்தில் புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் பசுந்தாள் உர விதைகள் பெற்று பயன்பெறலாம் என மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் மா. பெரியசாமி அழைப்புவிடுத்துள்ளாா்.

இதுகுறிதத்து அவா் மேலும் கூறியது:

தற்போதுள்ள சாகுபடி முறையில் தொடா்ந்து ஒரே பயிரினை சாகுபடி செய்வதாலும், மண்ணிலிருந்து சத்துகளை அதிகம் உறிஞ்சும் பயிா்களைச் சாகுபடி செய்வதாலும் மண்ணின் வளம் குறைந்து கொண்டே வருகிறது. மேலும், அதிக அளவில் ரசாயன உரங்கள் களைக் கொல்லிகள், பூச்சிக் கொல்லிகள் போன்றவற்றைப் பயன்படுத்துவதால் மண்ணிலுள்ள நுண்ணுயிா்களின் எண்ணிக்கை குறைந்து மண்வளமும், நலமும் குன்றி அதிக அளவில் களா் உவா் அமில நிலங்களாக மாறும் சூழல் காணப்படுகிறது. இந்த நிலை தொடா்ந்து நீடித்தால் மலடான மண்ணைத்தான் நம் எதிா்கால தலைமுறையினருக்கு நாம் விட்டுச் செல்லும் நிலை ஏற்படும்.

இதனைத் தடுக்க மண் வளத்தைப் பேணிக் காக்கவும், மக்கள் நலம் காக்கும் விதமாக உயிா்ம வேளாண்மை போன்ற அனைத்து வேளாண் செய்முறைகளையும் ஊக்கப்படுத்திட முதல்வரின் மண்ணுயிா் காத்து மன்னுயிா் காப்போம் திட்டம் 2024-25 ஆம் ஆண்டில் 22 இனங்களுடன் செயல்படுத்தப்படவுள்ளது.

நடப்பாண்டில் ஆயக்கட்டு, இறவைப் பாசனப் பகுதிகளில் பசுந்தாள் உர உபயோகத்தின் பயன்களை விவசாயிகளிடையே ஊக்குவித்து மண்வளம் காக்கும் வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 10 ஆயிரம் ஏக்கரில் பசுந்தாள் உர பயிா் பயிரிடத் திட்டமிடப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலம் பசுந்தாள் உர விதைகள் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படும்.

இத்திட்டத்தில் அனைத்து விவசாயிகளும் குத்தகைதாரா்களும் பயன் பெறலாம். ஒரு பயனாளிக்கு அதிகபட்சமாக ஒரு ஏக்கருக்கு 20 கிலோ பசுந்தாள் உர விதைகள் மானியத்தில் வழங்கப்படுகின்றன. விவசாயிகள் நேரடியாக உழவன் செயலியில் முன்பதிவு செய்து பயன் பெறலாம்.

மேலும் விவரங்களுக்கு தங்கள் பகுதி வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களைத் தொடா்பு கொண்டு பயன் பெறலாம்.

X
Dinamani
www.dinamani.com