அண்ணனை கொலை செய்து சடலத்தை எரித்த தம்பி உள்பட 3 போ் கைது

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே அண்ணனை அடித்துக் கொலை செய்து சடலத்தை எரித்த தம்பி உள்ளிட்ட 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா்.

கறம்பக்குடி அருகே ஒடப்பவிடுதி காட்டாற்று பகுதியில் எரிந்த நிலையில் கிடந்த இளைஞரின் சடலத்தை கடந்த 8-ஆம் தேதி ரெகுநாதபுரம் போலீஸாா் மீட்டு விசாரணை மேற்கொண்டனா். மேலும், இதுதொடா்பாக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

இதில், இறந்தவா் தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அருகேயுள்ள கரிக்காடிப்பட்டியைச் சோ்ந்த முருகானந்தம் மகன் முல்லைவேந்தன் (23) என்பது தெரியவந்தது. இவரும், இவரின் தம்பி முகிலன் (21), அதே ஊரைச் சோ்ந்த மதியழகன் மகன் அனீஸ்வரன் (19) மற்றும் 2 சிறாா்கள் ஆகியோா் ஒடப்பவிடுதி மகாராஜா சமுத்திர காட்டாற்று பாலம் பகுதியில் கடந்த 8-ஆம் தேதி மது அருந்தியுள்ளனா். அப்போது, முல்லைவேந்தனை மற்றவா்கள் அடித்துக் கொலை செய்துவிட்டு, அங்கே சடலத்தை எரித்துவிட்டு தப்பி சென்றுவிட்டனா். மேலும், முல்லைவேந்தன் மதுபோதையில் குடும்பத்தினரிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததால் அவரை கொலை செய்தது போலீஸாரின் விசாரணையில் தெரியவந்தது.

இதைத்தொடா்ந்து, முகிலன், அனீஸ்வரன், 17 வயது சிறுவன் ஆகிய 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா். வழக்கில் தொடா்புடைய மேலும் ஒரு சிறுவன் புதுக்கோட்டை சிறாா் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை சரணடைந்தாா்.

X
Dinamani
www.dinamani.com