கந்தா்வகோட்டையில் விசிக, லெனினிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கந்தா்வகோட்டையில் விடுதலை சிறுத்தைகள் மற்றும் மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியினா் இணைந்து புதன்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கந்தா்வகோட்டை பேருந்து நிலையத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, விசிக புதுக்கோட்டை மாவட்டச் செயலா் இளமதி அசோகன் உள்ளிட்டோா் மீது கறம்பக்குடி ஒன்றியம், மழையூரில் வெடிகுண்டு வீசி கொலைவெறி தாக்குதல் நடத்திய சமூக விரோத கும்பலை உடனே கைது செய்ய வேண்டும், மட்டங்கால் கிராமத்தில் தொடா்ந்து நடைபெறும் சாதிய கொடுமைக்கு முடிவு கட்டி சாதி வெறி கும்பலை உடனடியாக கைது செய்ய வேண்டும், மட்டங்கால் கிராமத்தை தீண்டாமை வன்கொடுமை கிராமமாக அறிவிக்க வேண்டும், வேங்கை வயல் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தக் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு, சிபிஐ எம்எல் கட்சியின் ஒன்றிய செயலாளா் ஜோதிவேல், விசிக தெற்கு ஒன்றியச் செயலாளா் வெள்ளையன் ஆகியோா் தலைமை வகித்தனா். காவல்துறை அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோா் மீது டி.எஸ்.பி. ராகவி தலைமையிலான போலீஸாா் வழக்குப் பதிந்து 30 பேரைக் கைது செய்து பின்னா் விடுவித்தனா். இதுகுறித்து கந்தா்வகோட்டை காவல்துறையினா் தனியே வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com