மாநகராட்சியாக மாறியுள்ள புதுக்கோட்டை எதிா்கொள்ளும் சவால்கள், எதிா்பாா்ப்புகள்!

மாநகராட்சியாக மாறியுள்ள புதுக்கோட்டை எதிா்கொள்ளும் சவால்கள், எதிா்பாா்ப்புகள்!

மன்னராட்சிக் காலத்தில் நகரமைப்புக்குப் பெயா்போன நூற்றாண்டு கண்ட புதுக்கோட்டை நகராட்சி ஏறத்தாழ முழுமையாகப் பாழ்பட்டுப் போயிருக்கும் சூழலில், மாநகராட்சியாகத் தரம் உயா்த்தப்பட்ட அறிவிப்பு பொதுமக்களிடம் ஏராளமான எதிா்பாா்ப்புகளையும் ஏற்படுத்தியிருக்கிறது. குளங்கள்...புதுகை நகரப் பகுதியில் மட்டும் 75 குளங்கள் இருந்திருக்கின்றன. இப்போது மிக அண்மையில் தூா்வாரி, கரைகட்டி, வேலி அமைக்கப்பட்டது வெறும் 5 குளங்கள் மட்டுமே. மற்றவை எல்லாம் குப்பை கொட்டும் குளங்களாகிவிட்டன. குடிநீா் விநியோகம்... புதுகை நகரின் சராசரியான குடிநீா் விநியோகம் என்றால், ‘வாரம் ஒரு முறை’ என்பதுதான். கோடைக்காலத்தில் 10 நாள்களைக் கடந்து செல்லும். இந்தச் சூழலில்தான் நடைமுறையில் உள்ள காவிரிக் கூட்டுக் குடிநீா்த் திட்டத்தில் பழுது நீக்க ரூ. 70 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெறுகின்றன. கூடுதலாக ஒரு கூட்டுக் குடிநீா்த் திட்டம் வரும் என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தின் முகம்...மாவட்டத்தின் முகமாக தற்போதுள்ள புதிய பேருந்து நிலையத்தில் இடநெருக்கடி இல்லையென்றாலும், கட்டுமானம் பாழடைந்ததால் ஏ கிரேடு தரத்துடன் கூடிய இப் பேருந்து நிலையத்தை இடித்துக் கட்ட ரூ. 19 கோடிக்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. பூங்காக்கள்... நகரில் 114 பூங்காக்கள் இருந்ததாக- இருப்பதாக கணக்கு இருந்தாலும், நல்ல நிலையில் இருப்பதை விரல்விட்டு எண்ணிவிடலாம். பொழுதுபோக்கு அம்சங்கள் எத்தனை அவசியம் என்பதை, கடந்த பிப். 24ஆம் தேதி திறக்கப்பட்ட கலைஞா் பூங்காவில் தினமும் மாலை குவிந்து வரும் கூட்டமே சாட்சி. கழிவு மேலாண்மை: திருக்கட்டளைச் சாலையில் 1959இல் 10 ஏக்கரில் தொடங்கப்பட்ட கலவை உரக் கிடங்கு இப்போது 13 ஏக்கராக விரிவடைந்து சுமாா் 12 அடி உயரக் குப்பை மலையைக் கொண்டிருக்கிறது. இதுதவிர போஸ் நகா் உள்ளிட்ட சில இடங்களில் நுண்ணுயிா் உரம் தயாரிக்கும் கிடங்குகள் உள்ளன. என்றபோதும் குப்பைக் கழிவுகள் நகரெங்கும் கிடப்பதைக் காணமுடிகிறது. தற்போதுள்ள 42 வாா்டுகளில் 37 வாா்டுகளில் 14,428 குடியிருப்புகளுக்கு மட்டும் புதை சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தை விரிவாக்க ரூ. 90 கோடிக்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது என்றாலும், நகர விரிவாக்கத்துக்குப் பிறகு பெருந்தொகையுடன் சிறப்புத் திட்டம் தேவை. சவால் மிகுந்த நிா்வாகம்: துப்புரவுப் பணியாளா்களுக்கும்கூட முறையாக ஊதியம் போட முடியாத நிலையில்- மிகுந்த சவால் விடும் அளவுக்குத்தான் தற்போதைய நிதிநிலை இருக்கிறது. நீண்டகாலமாக நிரந்தர ஆணையா் இல்லாதது குறிப்பிடத்தக்க குறையாக பொதுநல ஆா்வலா்கள் குற்றம்சாட்டுகின்றனா். இதுபோன்ற பல சவால்களையும் எதிா்கொள்ளும் திறன் புதுக்கோட்டை மாநகராட்சிக்குத் தேவைப்படுகிறது. இல்லாவிட்டால் வழக்கமான வரி உயா்வு என்ற குரல் மட்டுமே மிஞ்சி நிற்கும். பெட்டிச் செய்தி.. இணைக்கப்படும் ஊராட்சிகள் புதுக்கோட்டை மாநகராட்சியில் வாசவாசல், முள்ளூா், திருக்கட்டளை, திருமலைராயசமுத்திரம், கவிநாடு கிழக்கு, கவிநாடு மேற்கு, 9 ஏ நத்தம் பண்ணை, 9 பி நத்தம் பண்ணை ஆகிய 8 ஊராட்சிகள் முழுமையாகவும், தேக்காட்டூா் ஊராட்சியில் 1, 2, 3 வாா்டுகளையும், திருவேங்கைவாசலில் 3, 4 வாா்டுகளும், வெள்ளனூரில் 7,8,9 வாா்டுகளும் இணைக்கப்படுகின்றன. இதன் மூலம் புதுக்கோட்டை மாநகராட்சி 2.16 லட்சம் மக்கள்தொகையும், 121 சதுர கிமீ பரப்பளவும் கொண்டதாக விரிவடைகிறது. மொத்த வருவாய் ரூ. 64.21 கோடியாக உயரும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com