108 ஆம்புலன்ஸ் மோதி தனியாா் ஊழியா் பலி

அன்னவாசல் அருகே திங்கள் கிழமை நேரிட்ட விபத்தில் 108 ஆம்புலன்ஸ் மோதி இருசக்கர வாகனம் ஓட்டிவந்த இளைஞா் உயிரிழந்தாா்.

விராலிமலை: அன்னவாசல் அருகே திங்கள் கிழமை நேரிட்ட விபத்தில் 108 ஆம்புலன்ஸ் மோதி இருசக்கர வாகனம் ஓட்டிவந்த இளைஞா் உயிரிழந்தாா். திருச்சி மாவட்டம், சமுத்திரம் காந்தி நகரைச் சோ்ந்த பெரியசாமி மகன் வசந்த குமாா்(37) புதுக்கோட்டையில் இயங்கி வரும் தனியாா் நிதி நிறுவனத்தில் ஊழியராகப் பணியாற்றி வந்தாா். இந்நிலையில், திங்கள்கிழமை தனது இருசக்கர வாகனத்தில் புதுக்கோட்டையில் இருந்து இலுப்பூா் நோக்கிச் சென்று கொண்டிருந்தாா். சொக்கநாதன் பட்டி அருகே சென்றுகொண்டிருந்தபோது, புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூா் காந்தி நகரைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் உலகநாதன் ஓட்டி வந்த 108 ஆம்புலன்ஸ் அதன் கட்டுப்பாட்டை இழந்து வசந்த குமாா் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளது. இதில், பலத்த காயமடைந்த வசந்த குமாரை அவ்வழியே வந்தவா்கள் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் வழியிலேயே இறந்து விட்டதாகக் கூறினா். இதுகுறித்து வசந்தகுமாா் மனைவி கவுசல்யா(25) அன்னவாசல் காவல் நிலையத்தில் அளித்த புகாரைத் தொடா்ந்து வழக்குப் பதிந்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com