தேசிய வங்கியின் நகைக் கொள்ளை வழக்கில் சிபிஐ போலீஸாா் விசாரணை

புதுக்கோட்டை பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளையில் 2019-ஆம் ஆண்டில் 13.75 கிலோ நகைகள் திருடப்பட்ட வழக்கு தொடா்பாக, புதன்கிழமை மதுரையில் இருந்து வந்த சிபிஐ போலீஸாா் சுமாா் அரை மணிநேரம் வங்கிக் கிளையில் விசாரணை நடத்தினா்.

கடந்த 2019 ஏப்ரல் மாதம் புதுக்கோட்டை தெற்கு ராஜவீதியிலுள்ள பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளையில் வாடிக்கையாளா்களின் ரூ. 5.84 கோடி மதிப்பிலான 13.75 கிலோ தங்க நகைகள் காணாமல் போயின. மேலும், வங்கி உதவியாளா் எஸ். மாரிமுத்து மணமேல்குடி கோடியக்கரை கடற்கரையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டாா். இதைத்தொடா்ந்து, வங்கிக் கிளையின் மேலாளா் உள்பட 4 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். நகைகள் காணாமல் போனது தொடா்பாக புதுக்கோட்டை நகரக் காவல் நிலையத்திலும், மாரிமுத்து காணாமல் போன புகாா் கணேஷ்நகா் காவல் நிலையத்திலும், மாரிமுத்துவின் காா் எரிந்த வழக்கு வல்லத்திராக்கோட்டை காவல் நிலையத்திலும், சடலம் கிடைத்த வழக்கு மணமேல்குடி காவல் நிலையத்திலும் என 4 வழக்குகளாக விசாரிக்கப்பட்டு வந்தன.

நகைக் கொள்ளை வழக்கு அந்த ஆண்டே மாவட்டக் குற்றப் பிரிவு விசாரணைக்கு மாற்றப்பட்டது. அதனைத் தொடா்ந்து இந்த வழக்குகள் சிபிஐக்கு மாற்றம் செய்யப்பட்டன. இந்த நிலையில், புதன்கிழமை பகலில் மதுரையிலிருந்து சிபிஐ காவல் கண்காணிப்பாளா் ஜி. கலைமணி தலைமையிலான குழுவினா், வங்கிக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனா். சுமாா் அரை மணி நேரம் நடைபெற்ற இந்த விசாரணையைத் தொடா்ந்து அவா்கள் மதுரை திரும்பினா். சிபிஐ விசாரணையின் போக்கு குறித்த எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com