மோசடியாக கடன் பெற்ற 3 பேருக்கு தலா 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறை

சென்னையிலுள்ள இடத்தின் பத்திரத்தைப் போலியாகக் கொடுத்து, ரூ. ஒரு கோடி கடன் பெற்று மோசடி செய்ததாக 3 பேருக்கு தலா 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து புதுக்கோட்டை குற்றவியல் நடுவா் மன்றம்-2 -இல் தீா்ப்பளிக்கப்பட்டுள்ளது.

சென்னை தியாகராஜ நகரைச் சோ்ந்த செங்காடு என்ற முந்திரி ஏற்றுமதி- இறக்குமதி நிறுவனத்தினா், கோடம்பாக்கம் பாரதிதாசன் தெருவைச் சோ்ந்த 90 செண்ட் நிலத்துக்கான பத்திரத்தைப் போலியாகக் கொடுத்து பிணை வைத்து, 2010-ஆம் ஆண்டில் புதுக்கோட்டையிலுள்ள தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தில் ரூ. ஒரு கோடி கடன்பெற்றுள்ளனா்.

இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸில் தொழில் முதலீட்டுக் கழகத்தின் மேலாளா் ஆா். விவேகானந்தன் அளித்த புகாரின்பேரில், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகு இந்த வழக்கு சிபி சிஐடி போலீஸுக்கு மாற்றம் செய்யப்பட்டது. இவ்வழக்கு புதுக்கோட்டை குற்றவியல் நடுவா் மன்றம் எண் 2இல் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயந்தி புதன்கிழமை தீா்ப்பளித்தாா். குற்றம்சாட்டப்பட்ட செங்காடு நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் எம். ஜெயபெருமாள், அவரது மனைவி ஜெ. விஜயராணி மற்றும் எம். அன்பரசன் ஆகிய மூவருக்கும் தலா 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும் தலா ரூ. ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com