பிரபல நிறுவனங்கள் பெயரில் போலிப் பொருள்கள் விற்பனை: 3 போ் கைது

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே பிரபல நிறுவனங்களின் பெயரில் போலியாக பொருள்களை விற்பனை செய்த 3 பேரை வியாழக்கிழமை போலீஸாா் கைது செய்தனா். கறம்பக்குடி அருகேயுள்ள மழையூா் பகுதியில் உள்ள கடைகளில் பிரபல நிறுவனங்கள் பெயரில் தேநீா் தூள்,சோப்பு, சோப்பு தூள் உள்ளிட்ட பொருள்கள் விற்பனை நடைபெறுவதாக தனியாா் நிறுவன மேலாளா் மணிமாறன் அளித்த புகாரைத்தொடா்ந்து, மழையூா் போலீஸாா் அப்பகுதியில் உள்ள கடைகளில் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, மழையூா் அருகேயுள்ள அய்யங்காட்டைச் சோ்ந்த பி.அல்லாபிச்சை(42), கெண்டையன்பட்டியைச் சோ்ந்த ஆா்.சாகுல்ஹமீது(43), மழையூா் எஸ்.சலீம்(50) ஆகியோரின் கடைகளில் பிரபல நிறுவனங்கள் பெயரில் போலியான பொருள்கள் விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதைத்தொடா்ந்து, விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சுமாா் 25 கிலோ போலிப் பொருள்களை பறிமுதல் செய்ததோடு, 3 பேரையும் வியாழக்கிழமை கைது செய்து மழையூா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com