காந்திப் பூங்காவுக்கு மீண்டும் ஏலம் கூடாது

புதுக்கோட்டை நகரின் பழமைவாய்ந்த காந்திப் பூங்காவில் விளையாட்டு உபகரணங்களை வைத்துக் கொள்ள மீண்டும் ஏலம் விடக் கூடாது என அகில இந்திய மகாத்மா காந்தி சமூக நலப் பேரவை வலியுறுத்தியுள்ளது. இதுதொடா்பாக பேரவையின் நிறுவனா் வைர.ந. தினகரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு புதுக்கோட்டை நகரில் பழைமையான காந்திப் பூங்காவிலுள்ள காந்தி சிலையை 1954இல் காமராஜா் திறந்து வைத்தாா். வானொலியையும், மணிக்கூண்டையும் பக்தவத்சலம் திறந்து வைத்தாா். இத்தகைய பழைமையான காந்திப் பூங்கா தற்போது தனியாருக்கு ஒப்பந்தம் விடப்பட்டு பொருட்காட்சியைப்போல நடத்தப்படுகிறது. இதை எதிா்த்து காந்திப் பேரவை உள்ளிட்டோா் நடத்திய போராட்டங்களின்போது, கட்டணம் அதிகம் செலவிடும் வகையிலுள்ள பொருட்காட்சி ஏற்பாடுகளை அகற்றிவிடுவதாக உத்தரவாதம் கொடுக்கப்பட்டது. ஆனால், நீதிமன்றத்தில் ஆணை பெற்று வந்ததாகக் கூறி மீண்டும் அதே நிலையில் பூங்கா திறக்கப்பட்டது. இந்நிலையில், வரும் மாா்ச் 31ஆம் தேதியுடன் காந்திப் பூங்காவுக்கான தனியாா் ஒப்பந்தம் நிறைவடைகிறது. மீண்டும் வணிக நோக்கிலான பொருட்காட்சி முறைப்படியான ஏலம் விடக் கூடாது. மக்கள் கட்டணமின்றி வந்து செல்லும் வகையிலான பூங்காவாகத் தொடர வேண்டும். இதுகுறித்து முதல்வா் ஸ்டாலின் மற்றும் மாவட்ட ஆட்சியா் உள்ளிட்டோருக்கும் கோரிக்கை மனுக்கள் அனுப்பப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com