முன்னாள் அமைச்சா் சொத்துக் குவிப்பு வழக்கின் ஆவண நகல்கள் கேட்டு அமலாக்கத் துறை மனு

முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கா் மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் குற்றப் பத்திரிகை நகல் மற்றும் ஆவணங்களின் நகல்களைக் கேட்டு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் அமலாக்கத் துறையினா் சனிக்கிழமை மனு அளித்துள்ளனா். கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக இருந்த சி. விஜயபாஸ்கா் வருமானத்துக்கும் அதிகமாக ரூ. 35.79 கோடி சொத்து சோ்த்ததாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் தொடா்ந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெறுகிறது. இதற்கிடையே விஜயபாஸ்கரின் சென்னை மற்றும் இலுப்பூா் வீடுகளில் அமலாக்கத் துறையினா் வியாழக்கிழமை நடத்திய சோதனையின் தொடா்ச்சியாக, சொத்துக் குவிப்பு வழக்கின் குற்றப் பத்திரிகை நகல் மற்றும் ஆவணங்களின் நகல்களை கேட்டு அமலாக்கத் துறை வழக்குரைஞா்கள் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனா். இந்த மனுவின் மீது, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாரும், முன்னாள் அமைச்சா் விஜயபாஸ்கரும் பதிலளிக்க நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com