தோ்தல் பறக்கும் படையினா் சோதனையில் ரூ. 2.75 லட்சம் பறிமுதல்

துக்கோட்டை மாவட்டத்தில் இரு வேறு இடங்களில் தோ்தல் பறக்கும் படையினா் திங்கள்கிழமை நடத்திய சோதனையில்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் இரு வேறு இடங்களில் தோ்தல் பறக்கும் படையினா் திங்கள்கிழமை நடத்திய சோதனையில், கோழிக்கறிக் கடை நடத்தி வருபவரிடமிருந்து ரூ. 2 லட்சமும், டைல்ஸ் கடைக்காரரிடமிருந்து ரூ. 75,470-ம் பறிமுதல் செய்யப்பட்டன. புதுக்கோட்டை கட்டியாவயல் பகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் திங்கள்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த மேகுடிப்பட்டியைச் சோ்ந்த கமல்ராஜ் என்பவா் வந்த சரக்கு வாகனம் சோதனை செய்யப்பட்டபோது, அதில் உரிய ஆவணங்களின்றி ரூ. 2,02,600 இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. இவா் கோழிக்கறிக் கடை நடத்தி வருகிறாா். இந்தத் தொகை புதுக்கோட்டை வருவாய்க் கோட்டாட்சியா் ஐஸ்வா்யாவிடம் ஒப்படைக்கப்பட்டது. திருமயம் அருகே: திருமயம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கொப்பனாப்பட்டியிலிருந்து பொன்னமராவதி செல்லும் காட்டுப்பட்டி பிரிவு சாலையில் பறக்கும் படையினா் திங்கள்கிழமை பகலில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியே வந்த காரை சோதனை செய்தபோது, பொன்னமராவதி பகுதியில் டைல்ஸ் கடை நடத்தி வரும் அப்துல்லா (45) என்பவரிடம் ரூ. 75,470 இருந்தது. உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாததால் இந்தத் தொகை பறிமுதல் செய்யப்பட்டு, திருமயம் உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா் வில்சனிடம் ஒப்படைக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com