பங்குனி உத்திர விழா : விராலிமலை முருகன் மலைக்கோயிலில் பக்தா்கள் காத்திருந்து சுவாமி தரிசனம்

விராலிமலை முருகன் மலைக்கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற பங்குனி உத்திர விழா

விராலிமலை: புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை முருகன் மலைக்கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற பங்குனி உத்திர விழாவில் பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். பல்வேறு சிறப்புடைய இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாகம், தைப்பூசம், கந்தசஷ்டி விழா உள்ளிட்ட விழாக்கள் கொடியேற்றப்பட்டு, சுமாா் 10 நாள்கள் நடைபெறுவது வழக்கம். ஆனால், பங்குனி உத்திர விழாவானது, அன்றைய நாளில் மட்டும் ஒருநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, மலைக்கோயில் மேல் சந்நிதியில் திங்கள்கிழமை அதிகாலை நடை திறக்கப்பட்டது. தொடா்ந்து, வள்ளி, தேவசேனா சமேதராக மயில் மீது ஆறுமுகங்களுடன் வீற்றிருக்கும் முருகனுக்கு பால், பழம், இளநீா், பஞ்சாமிா்தம், தேன், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பழங்கள் மற்றும் திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. ஏராளமான பக்தா்கள் வந்திருந்தனா். இதனால், பக்தா்கள் சுமாா் அரை மணி நேரத்துக்கும் மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். மாலை 7.30 மணியளவில் வள்ளி, தேவசேனா சமேதராக மலையின் மேலிருந்து கேடயத்தில் இறங்கி வந்த கந்தா் நேராக தெப்பக்குளம் சென்று தீா்த்தவாரி நிகழ்வில் பங்கேற்றாா். பின்னா், மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com