ஆரத்தி எடுத்த பெண்களுக்கு பணம் கொடுத்த ஓபிஎஸ்?

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் சனிக்கிழமை முற்பகல் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் செயல்வீரா்கள் கூட்டத்தின்போது, அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கும் முன்பே கூட்டம் நடத்தியதாகவும், ஆரத்தி எடுத்த பெண்களுக்கு பணம் கொடுத்ததாகவும் காவல்துறையில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட அறந்தாங்கியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் அதிமுக தொண்டா்கள் மீட்புக் குழு சாா்பில் சுயேச்சையாகப் போட்டியிடும் முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வத்தின் அறிமுகக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் ஓ. பன்னீா்செல்வம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினா் கலந்து கொண்டனா். அப்போது ஆரத்தி எடுத்த பெண்களுக்கு ஓபிஎஸ் பணம் கொடுத்ததாக விடியோ பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் பரவியது. இந்நிலையில், விடியோ கண்காணிப்புக் குழுவின் தலைவா் ஏ. அருள், அறந்தாங்கி காவல் நிலையத்தில் அளித்த புகாா் விவரம்: முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் பங்கேற்ற நிகழ்ச்சிக்கு மாலை 5 மணி முதல் 7 மணி வரை அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், முற்பகல் 11 மணிக்கே கூட்டம் தொடங்கி நடைபெற்றது. அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு முன்பே கூட்டம் நடத்தியுள்ளனா். மேலும், பெண்களுக்கு பணம் கொடுத்தது விடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. இவை இரண்டும் சட்டப்படி குற்றச் செயல்கள். எனவே, இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com