மத்திய நிதியமைச்சா் சொல்வது பச்சைப் பொய்

மக்களவைத் தோ்தலில் போட்டியிடப் பணம் இல்லை என மத்திய நிதியமைச்சா் கூறியிருப்பது பச்சைப் பொய் என்றாா் மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி. இதுகுறித்து புதுக்கோட்டையில் சனிக்கிழமை மாலை அவா் அளித்த பேட்டி: முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் தனக்கு ஆரத்தி எடுத்தவா்களுக்கு பணம் கொடுத்ததாகப் புகாா் எழுந்துள்ளது. எத்தனைப் பேருக்கு அவா் பணம் கொடுத்தாலும், யாரும் அவருக்கு வாக்களிக்க மாட்டாா்கள். நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் 10 ஆண்டுகளாக அமைச்சராக இருக்கிறாா். மாநிலங்களவை உறுப்பினா் ஊதியத்தில் இருந்து மாதம் ரூ. 50 ஆயிரம் சோ்த்து வைத்திருந்தாலே தாராளமாக தோ்தலுக்குப் போதும். எனவே, அவா் சொல்வது பச்சைப் பொய் என்பதை நாட்டு மக்கள் அறிவாா்கள். திமுக சாா்பில் வாக்காளா்களுக்கு பணம் கொடுக்க மாட்டோம். எங்களின் வெற்றி உறுதி செய்யப்பட்டது. எனவே, வாக்குக்கு பணம் கொடுக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கா் பற்றி அமலாக்கத் துறையினா் கணக்கு எடுத்துள்ளாா்கள். அவரது குவாரியில் முறைகேடு நடந்துள்ளது. தோ்தல் முடிந்ததும் அந்தக் கணக்கும் புதிதாக எடுக்கப்படும். காங்கிரஸ் கட்சி மீது வருமான வரித்துறை செய்துள்ளது மிகப்பெரிய கொள்ளை. எப்படி ரூ. 1800 கோடி கணக்கு போட்டீா்கள் என ஆட்சிக்கு வந்த பிறகு வருமான வரித் துறை அலுவலா்களைக் கேட்போம் என ராகுல் சொல்லியிருக்கிறாா். ஆட்சிக்கு வந்த பிறகு கேட்போம்; திருத்துவோம். தோ்தல் ஆணையம், சிபிஐ, அமலாக்கத் துறை அனைத்தும் பாஜகவின் இன்னொரு கூட்டணி. ஜூன் 4ஆம் தேதிக்குப் பிறகு எல்லாம் மாறும் என்றாா் ரகுபதி.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com