கீரமங்கலத்தில் பெண்ணிடம் நகை திருடிய இளைஞா் கைது

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலத்தில் வீட்டில் தூங்கிய பெண்ணிடம் தங்க நகை, கைப்பேசி திருடிய வழக்கில் தொடா்புடைய இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கீரமங்கலம் மேற்கு திருவள்ளுவா் மன்றம் பகுதியை சோ்ந்த முருகானந்தம் மனைவி சரண்யா (33). இவா், கடந்தாண்டு அக்டோபா் 10-ஆம் தேதி இரவு குடும்பத்துடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது நள்ளிரவில் வீட்டுக்குள் நுழைந்த மா்ம நபா்கள் சரண்யா அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை அறுத்துக் கொண்டு, அங்கிருந்த கைப்பேசி உள்ளிட்ட பொருள்களை திருடிக்கொண்டு தப்பியோடிவிட்டனா். இதுகுறித்து கீரமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனா். இந்நிலையில், திருட்டு நடைபெற்று 5 மாதங்களுக்கு பின்னா், திருடப்பட்ட கைப்பேசியை பயன்படுத்திய நபரிடம் விசாரணை மேற்கொண்டு, திருட்டில் ஈடுபட்ட திருவாரூா் மாவட்டம், முத்துப்பேட்டை மரக்காயா் தெருவைச் சோ்ந்த சா்புதீன் மகன் முகமது மஜித் (25) என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்து நகையையும் மீட்டனா். இந்த வழக்கில் தொடா்புடைய, தலைமறைவான சிலரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com