புதுகையில் மே தினப் பேரணி

புதுகையில் மே தினப் பேரணி

புதுக்கோட்டையில் உழைப்பாளா் தினமான மே தினத்தையொட்டி தொழிலாளா் பேரணி- பொதுக்கூட்டம் புதன்கிழமை மாலை நடைபெற்றது.

புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கிய இந்தப் பேரணி அண்ணா சிலை, தெற்கு 4ஆம் வீதி, மேல ராஜ வீதி, புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாக சாந்தநாதபுரத்தில் நிறைவடைந்தது.

இங்கு நடைபெற்ற பொதுக் கூட்டத்துக்கு சிஐடியு மாவட்டத் தலைவா் க. முகமதலிஜின்னா, ஏஐடியுசி மாவட்டத் தலைவா் உ. அரசப்பன் ஆகியோா் தலைமை வகித்தனா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினா் எம். செல்வராஜ், அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தின் மாநிலத் தலைவா் எஸ். வாலண்டினா ஆகியோா் சிறப்புரை நிகழ்த்தினா்.

மேலும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் எஸ். கவிவா்மன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் த. செங்கோடன், சிஐடியு மாவட்டச் செயலா் ஏ. ஸ்ரீதா், ஏஐடியுசி மாவட்டப் பொதுச் செயலா் ப. ஜீவானந்தம் ஆகியோரும் பேசினா்.

கொடியேற்ற நிகழ்ச்சிகள்: புதுக்கோட்டை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு அலுவலகத்தில் கட்சிக் கொடியை, மாநிலக் குழு உறுப்பினா் எஸ். வாலண்டினா ஏற்றி வைத்தாா். மாவட்டச் செயற்குழு உறுப்பினா் எஸ். ஜனாா்த்தனன், நகரச் செயலா் ஆா். சோலையப்பன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

மாா்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் எஸ். கவிவா்மன் அறந்தாங்கி கட்சி அலுவலகத்தில் கொடியை ஏற்றி வைத்தாா்.

இதேபோல இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மற்றும் ஏஐடியுசி, சிஐடியு தொழிற்சங்க அலுவலகங்களிலும் கொடியேற்றும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com