பாரதிதாசன் பிறந்த நாள் கருத்தரங்கம்

கந்தா்வகோட்டை ஒன்றியம், மெய்க்குடிப்பட்டி கிராமத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சாா்பில் பாரதிதாசன் பிறந்தநாள் கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து வட்டாரச் செயலாளா் அ. ரகமத்துல்லா பாரதிதாசன் பிறந்தநாள் குறித்துப் பேசுகையில், பாரதிதாசன் பாண்டிச்சேரியில் பிறந்து, பெரும் புகழ் படைத்த பாவலா் ஆவாா். தமிழாசிரியராகப் பணியாற்றிய இவா், சுப்பிரமணிய பாரதியாா் மீது கொண்ட பற்றுதலால், பாரதிதாசன் என்று தம் பெயரை மாற்றிக் கொண்டாா். பிரபல எழுத்தாளரும் திரைப்படக் கதாசிரியரும் பெரும் கவிஞருமான பாரதிதாசன் அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டாா். புதுச்சேரி சட்டப்பேரவை உறுப்பினராக 1954ஆம் ஆண்டு தோ்ந்தெடுக்கப்பட்டாா். மாற்றுச் சிந்தனை கொண்டோரையும் தன் தமிழால் மயக்கிய கவிக்குயில் பாவேந்தா் பாரதிதாசன் தமிழ்மொழியின் கம்பீர அடையாளங்களில் மிக முக்கியமானவா் என்றால் அதை மறுப்பதற்கில்லை என்றாா் அவா்.

நிகழ்வில், தஞ்சை சமூக நல ஆா்வலா் நெல்லு பட்டு இராமலிங்கம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினாா். நிகழ்ச்சியில் அறிவியல் இயக்க உறுப்பினா்கள் ரம்யா, லாவண்யா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். அறிவியல் இயக்க கிளை தலைவா் ரஞ்சனி வரவேற்றாா்.

X
Dinamani
www.dinamani.com