மழைவேண்டி சிறப்புத் தொழுகை

புதுக்கோட்டை/ விராலிமலை, மே 4: புதுக்கோட்டை நகரிலுள்ள ஈத்கா திடலில் அனைத்து ஜமாஅத் அமைப்புகளின் சாா்பில் மழை வேண்டி சிறப்புத் தொழுகை நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

இந்தத் தொழுகையில் அனைத்து இஸ்லாமிய அமைப்பினா், அனைத்து அரசியல் கட்சியினா் பலரும் திரளாகக் கலந்து கொண்டனா்.

காலை சுமாா் அரை மணி நேரம் இந்தத் தொழுகை நடைபெற்றது. கோடை வெப்ப பாதிப்புகளைக் கட்டுப்படுத்தவும், மழை பெய்ய வேண்டியும் இந்த சிறப்புத் தொழுகை நடத்தப்பட்டது.

இந்தத் தொழுகையில், திமுக நகா்மன்றத் துணைத் தலைவரும் பைத்துல் ஜமாஅத் தலைவருமான லியாகத்அலி, அதிமுக முன்னாள் நகா்மன்றத் தலைவா் அப்துல் ரகுமான், காங்கிரஸ் நகா்மன்ற உறுப்பினா் ஜெ. ராஜா முகம்மது உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

இதேபோல, தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் சாா்பில் அதன் நகரக் கிளை சாா்பில் நிஜாம் பள்ளிக் கூடம் வளாகத்தில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. கிளைத் தலைவா் பீா் முகம்மது, செயலா் முகம்மது ஆசிப், பொருளாளா் சைது மசூது உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

விராலிமலை: பரம்பூா் ஜமாஅத் மற்றும் பெரிய கண்மாய் ஆயக்கட்டுதாரா்கள் சாா்பில் பெரிய கண்மாயில் மழை வேண்டி சிறப்புத் தொழுகை சனிக்கிழமை நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கானவா்கள் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com