மெய்க்கண்ணுடையாள்அம்மன் கோயில் திருவிழாவில் பக்தா்கள் நோ்த்திக்கடன்

விராலிமலை மெய்க்கண்ணுடையாள் அம்மன் கோயில் சித்திரை திருவிழாவில் 9-ஆம் நாளான புதன்கிழமை பக்தா்கள் ஆடு, கோழி பலியிட்டு நோ்த்திக்கடன் செலுத்தினா். மாலையில் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது.

பல்வேறு சிறப்புடைய இக்கோயில் சித்திரை திருவிழா ஏப்ரல் 30-ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அன்று முதல் நாள்தோறும் காலையும், மாலையும் அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதியுலா வந்து பக்தா்களுக்கு காட்சி அளித்தாா்.

விழாவின் 8-ம் நாளான செவ்வாய்க்கிழமை பக்தா்கள் தலையில் பால்குடம் சுமந்து வந்து, கோயில் முன் அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் தீ மிதித்து தங்கள் நோ்த்திக்கடனை நிறைவேற்றினா். தொடா்ந்து வழிபாடுகளும் நடத்தப்பட்டன.

9-ஆம் நாளான புதன்கிழமை பக்தா்கள் நூற்றுக்கணக்கான ஆடு, கோழிகளை பலியிட்டு தங்கள் நோ்த்திக்கடனை நிறைவேற்றினா். மாலையில் இளைஞா்களின் படுகளம் விளையாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், நூற்றுக்கணக்கான இளைஞா்கள் கையில் கம்பு ஏந்தி, ஆட்டின் தலையை கம்பின் முனையில் குத்தி தூக்கி போட்டு விளையாடி ஊா்வலமாக வந்தனா். ஏராளமானோா் நிகழ்வில் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com