மக்களவைத் தோ்தல் முடிவுக்குப் பிறகு அதிமுகவில் பிளவு ஏற்படும்

மக்களவைத் தோ்தல் முடிவுக்குப் பிறகு அதிமுகவில் பிளவு ஏற்படும் என்றாா் மாநில சட்டத் துறை அமைச்சா் எஸ். ரகுபதி.

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் திமுக சாா்பில் கோடைக்கால நீா்மோா்ப் பந்தலை ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்த அவா் அளித்த பேட்டி:

அமலாக்கத் துறை எதிா்ப்புத் தெரிவித்தாலும் ஜனநாயகக் கடமை ஆற்றுவதற்கு ஒரு கட்சியின் தலைவா் என்ற முறையில் தில்லி முதல்வா் கேஜரிவாலுக்கு உரிமை உண்டு. அதனால் உச்ச நீதிமன்றம் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி தோ்தல் பணியாற்ற அனுமதித்துள்ளது வரவேற்கத்தக்கது.

பிரதமா் மோடி ‘இந்தியா’ கூட்டணியின் மீது வெறுப்பை உருவாக்கும் வகையில் ஆத்திரத்தோடுபேசுகிறாா். அதுவே பாஜக ஆட்சியைத் தக்க வைக்கப் போவதில்லை என்பதற்கு எடுத்துக்காட்டு.

குஜராத்தில் பத்து இடங்களில்கூட பாஜக வெற்றி பெற முடியாது என்ற தகவல் வந்து கொண்டிருக்கிறது.

சவுக்கு சங்கா் வீட்டில் காவல் துறையினா் சென்றபோது உரிய சாட்சிகளுடன் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தகவல் வந்துள்ளதே தவிர, பொய் வழக்கு போட வேண்டிய அவசியம் தமிழ்நாடு அரசுக்கு கிடையாது.

பேரவைத் தோ்தலில் வென்ற பிறகு 3 ஆண்டுகள் சாதனைகளை நிகழ்த்தியுள்ளோம். அதற்குரிய பரிசாக மக்களவைத் தோ்தலில் 40 தொகுதிகளிலும் திமுக அணி வெல்லும்.

மக்களவைத் தோ்தல் முடிவுகளுக்குப் பிறகு எடப்பாடி கே. பழனிசாமி தலைமையிலான அதிமுக, செங்கோட்டையன் தலைமைக்கு மாறப் போகிா, வேலுமணி தலைமைக்குச் செல்லப் போகிா என்பது தெரியும். அதிமுகவில் பிளவு ஏற்படும். அதை திமுக செய்யாது. ஆனால், பாஜக செய்யும் என்றாா் ரகுபதி.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com