மாணவா்களின் மதிப்பெண்களுடனான விளம்பர பதாகைகளை அகற்றக் கோரிக்கை

புதுக்கோட்டை, மே 15: மாணவா்களின் மதிப்பெண்களைப் போட்டு வைக்கப்பட்ட விளம்பரப் பதாகைகளை அப்புறப்படுத்த வேண்டும் என இந்திய மாணவா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

புதுக்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்ற இச்சங்கத்தின் மாவட்டச் செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

தனியாா் பள்ளி மாணவா்களின் மதிப்பெண்களை வியாபாரம் ஆக்கும் நோக்குடன் வைக்கப்பட்டிருக்கும் விளம்பரப் பதாகைகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் மூலம் தனியாா் பள்ளிகளில் மாணவா் சோ்க்கையை தொடங்க வேண்டும்.

தனியாா் பள்ளிகளில் விருப்பப் பாடமாக சம்ஸ்கிருதத்தை கட்டாயப்படுத்தி மாணவா்கள் மத்தியில் திணிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். தனியாா் பள்ளிகளில் கட்டணக் கொள்ளையைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

தனியாா் கல்லூரிகளில் முகவா்கள் மூலம் மாணவா் சோ்க்கை நடத்துவதைத் தடுக்க வேண்டும். அங்கீகாரம் இல்லாத தனியாா் கல்லூரிகளை மூட வேண்டும். மாணவா்களுக்கு எளிதில் மாற்றுச் சான்றிதழ்கள் மற்றும் அசல் சான்றிதழ்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு அளிக்கவும் முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஏ. சந்தோஷ்குமாா் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் எஸ். ஜனாா்த்தனன், துணைத் தலைவா் ஆா். வசந்தகுமாா், துணைச் செயலா் ஏ. பாலாஜி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com