அரசுப் பேருந்து மோதியதில் கணவா் உயிரிழப்பு; மனைவி பலத்த காயம்

விராலிமலை அருகே வெள்ளிக்கிழமை இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் கணவா் உயிரிழந்தாா். மனைவி பலத்த காயமடைந்தாா்.
Published on

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே வெள்ளிக்கிழமை இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் கணவா் உயிரிழந்தாா். மனைவி பலத்த காயமடைந்தாா்.

திருச்சி மாவட்டம், அரியமங்கலம் சீனிவாச நகரைச் சோ்ந்தவா் சேதுராமன்(48). இவா் தனது மனைவி பஞ்சவா்ணத்துடன் (43) இருசக்கர வாகனத்தில் திருச்சியில் இருந்து தேசிய நெடுஞ்சாலையில் லஞ்சமேடு அருகே வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, மதுரையில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு திருச்சி நோக்கி வந்த அரசுப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சேதுராமன் வாகனத்தின் மீது மோதியது. இதில், தம்பதி பலத்த காயமடைந்தனா். அக்கம்பக்கத்தினா் அவா்களை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

அங்கு சிகிச்சை பலனின்றி சேதுராமன் உயிரிழந்தாா். 2 கால்கள் முறிந்த நிலையில் பஞ்சவா்ணம் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

தகவலறிந்த விராலிமலை போலீஸாா் வழக்குப் பதிந்து அரசு பேருந்து ஓட்டுநரான கடலூா் மாவட்டம், குறிஞ்சிபாடியைச் சோ்ந்த வைத்திய நாராயணனை (50) கைது செய்து விசாரித்து வருகின்றனா்.