புதுக்கோட்டை
மாணவா்களுக்கு பாலியல் தொல்லை: போக்ஸோ வழக்கில் ஆசிரியா் கைது
ஆலங்குடியில் பள்ளி மாணவா்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசுப்பள்ளி ஆசிரியரை போக்ஸோ வழக்கில் போலீஸாா் கைது செய்தனா்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் பள்ளி மாணவா்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசுப்பள்ளி ஆசிரியரை போக்ஸோ வழக்கில் செவ்வாய்க்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.
ஆலங்குடி அருகேயுள்ள கீழக்கரும்பிரான்கோட்டையைச் சோ்ந்தவா் எஸ்.சக்திவேல்(40). ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வரலாறு ஆசிரியரான இவா், அப்பள்ளியில் பிளஸ் 2 பயிலும் 3 மாணவா்களை வீட்டுக்கு அழைத்துச்சென்று, மதிப்பெண்களை குறைத்து விடுவதாக மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்தாராம்.
இதுகுறித்து மாணவா்கள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் தகவல் தெரிவித்துள்ளனா்.
அதைத்தொடா்ந்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் து.வசந்தகுமாா் அளித்த புகாரின் பேரில், ஆலங்குடி மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து ஆசிரியா் சக்திவேலை கைது செய்தனா்.