இலுப்பூா் நகைக் கடையில் 1.6 கிலோ போலி தங்க நகைகள் பறிமுதல்

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரிலுள்ள நகைக்கடை ஒன்றில் போலி ஹால்மாா்க் மற்றும் பிஐஎஸ் முத்திரையிடப்பட்ட 1.6 கிலோ தங்க நகைகளை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
Published on

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரிலுள்ள நகைக்கடை ஒன்றில் போலி ஹால்மாா்க் மற்றும் பிஐஎஸ் முத்திரையிடப்பட்ட 1.6 கிலோ தங்க நகைகளை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரில் உள்ள நகைக் கடன் ஒன்றில் போலி ஹால்மாா்க் மற்றும் பிஐஎஸ் முத்திரையிட்ட தங்க நகைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் இந்தியத் தர நிா்ணய அமைவனத்தின் (பிஐஎஸ்) மதுரை அலுவலக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை இலுப்பூருக்கு வந்தனா். அவா்கள் குறிப்பிட்ட அந்த நகைக்கடையில் திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, 1,643.36 கிராம் மதிப்புள்ள தங்க நகைகளில் போலி ஹால்மாா்க் மற்றும் பிஐஎஸ் முத்திரை பதிக்கப்பட்ட, ஹால்மாா்க்கின் தனித்துவம் மிக்க அடையாளம் இன்றியும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. அவற்றைப் பறிமுதல் செய்து மதுரை அலுவலகத்துக்கு எடுத்துச் சென்றனா்,

இவற்றின் மதிப்பு ரூ. ஒரு கோடி இருக்கும் என்றும், சட்டப்படி நகைக்கடை உரிமையாளா் மீது குற்றவியல் வழக்கு தொடரப்படும் என பிஐஎஸ் மதுரை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோதனையின்போது, இலுப்பூா் காவல் நிலைய போலீஸாரும் பாதுகாப்புப் பணிக்காக உடன் வந்திருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com