பொன்னமராவதி வட்டாரப் பள்ளிகளில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கல்
பொன்னமராவதி: பொன்னமராவதி வட்டார அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ்-1 பயிலும் மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவில், சட்டத்துறை அமைச்சா் எஸ்.ரகுபதி பங்கேற்று வலம்புரி வடுகநாதன் மேல்நிலைப்பள்ளி, மேலைச்சிவபுரி, ஆலவயல், நகரப்பட்டி காரையூா், சடையம்பட்டி ஆகிய 6 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 653 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கிப் பேசினாா். இதில், 7.5 இட ஒதுக்கீட்டினால் புதுக்கோட்டை மாவட்டத்தில் 38 மாணவா்கள் மருத்துவக் கல்லூரிக்குத் தோ்வாகியுள்ளனா். மாணவா்கள் தமிழக அரசின் நலத்திட்டங்களை நன்முறையில் பயன்படுத்தி கல்வியில் முன்னேற வேண்டும் என்றாா்.
விழாவுக்கு, மாவட்ட வருவாய் அலுவலா் ரம்யாதேவி தலைமைவகித்தாா். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சண்முகம், பொன்னமராவதி ஒன்றியக் குழு தலைவா் சுதா அடைக்கலமணி, பேரூராட்சித் தலைவா் சுந்தரி அழகப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.