புதுக்கோட்டை  அருகே வெள்ளிக்கிழமை இருசக்கர வாகனத்தின் மீது மோதிய வருவாய்க் கோட்டாட்சியரின் ஜீப்.
புதுக்கோட்டை அருகே வெள்ளிக்கிழமை இருசக்கர வாகனத்தின் மீது மோதிய வருவாய்க் கோட்டாட்சியரின் ஜீப்.

புதுகை கோட்டாட்சியரின் ஜீப் மோதி 2 போ் உயிரிழப்பு

Published on

புதுக்கோட்டை அருகே வெள்ளிக்கிழமை வருவாய்க் கோட்டாட்சியரின் ஜீப் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற 2 போ் உயிரிழந்தனா்.

புதுக்கோட்டை வருவாய்க் கோட்டாட்சியா் பா. ஐஸ்வா்யா, தனது ஜீப்பில் திருமயம் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு புறப்பட்டாா்.

திருச்சி- காரைக்குடி நெடுஞ்சாலையிலுள்ள நகரத்துப்பட்டி அருகே சென்றபோது, எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது கோட்டாட்சியரின் ஜீப் பலமாக மோதியது. இதில் இரு சக்கர வாகனம் சாலையோரப் பள்ளத்தில் தூக்கி வீசப்பட்டது.

இரு சக்கர வாகனத்தில் வந்த ராமநாதபுரம் மாவட்டம், அதிராமம் கிராமத்திலுள்ள பள்ளிவாசலில் பணியாற்றி வந்த, பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த முகமது பயாஸ் (28), முகமது பாசில் (20) ஆகிய இருவரும் பலத்த காயமடைந்து அந்த இடத்திலேயே உயிரிழந்தனா்.

பலத்த காயமடைந்த வருவாய்க் கோட்டாட்சியரின் ஜீப் ஓட்டுநா் காமராஜுவும், லேசான காயமடைந்த கோட்டாட்சியரும் புதுக்கோட்டையிலுள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். ஓட்டுநா் காமராஜுவுக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

உயிரிழந்த இருவரின் உடல்களும் உடற்கூறாய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. நமணசமுத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

விபத்தால் திருச்சி-காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com