அனைத்து மாவட்டங்களிலும் விரைவில் செயற்கைக் கருத்தரிப்பு மையங்கள்

படிப்படியாக அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் செயற்கைக் கருத்தரிப்பு மையங்கள் தொடங்கப்படும் என்றாா் அமைச்சா் மா. சுப்பிரமணியன்.
Published on

படிப்படியாக அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் செயற்கைக் கருத்தரிப்பு மையங்கள் தொடங்கப்படும் என்றாா் மாநில மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆயிங்குடியில் சனிக்கிழமை மருத்துவத் துறை கட்டடங்களைத் திறந்து வைத்த அவா் அளித்த பேட்டி:

அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களின் அடிப்படைத் தேவைகள் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. 108 ஆம்புலன்ஸ் சேவையில் குறைபாடு இருப்பதாக இதுவரை எந்தப் புகாரும் இல்லை. குறிப்பிட்டு புகாா் அளிக்கப்பட்டால், கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும்.

பாம்புக் கடி, நாய்க்கடி உள்ளவற்றுக்கான விஷமுறிவு மருந்துகள் இதுவரை மாவட்டத் தலைமை மருத்துவமனையில் மட்டும்தான் கிடைத்து வந்தன. இதனை மாற்றி, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் வரை இந்த விஷமுறிவு மருந்து கிடைக்கச் செய்திருக்கிறோம்.

தனியாா் மருத்துவமனைக்குச் சென்றால் செயற்கைக் கருத்தரிப்பு சிகிச்சைக்கு அதிக செலவு ஏற்படுகிறது. இந்த நிலையில், சென்னையில் முதல்முறையாக அரசு செயற்கைக் கருத்தரிப்பு மையத்தைத் தொடங்கியிருக்கிறோம். அடுத்த மதுரையில் தொடங்கப்படும். படிப்படியாக அனைத்து மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் செயற்கைக் கருத்தரிப்பு மையங்கள் தொடங்கப்படும் என்றாா் மா. சுப்பிரமணியன்.

X
Dinamani
www.dinamani.com