திமுக ஆட்சியில் புதுகை மருத்துவத் துறையில் பிரம்மாண்ட வளா்ச்சி: மா.சுப்பிரமணியன்
திமுக ஆட்சியில் புதுக்கோட்டை மாவட்டம் புதிய மருத்துவ கட்டமைப்பு வசதிகள் பெற்று மருத்துவத் துறையில் பிரமாண்டமான வளா்ச்சியைப் பெற்று திகழ்கிறது என்றாா் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன்.
பொன்னமராவதி அருகே உள்ள காரையூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ. 50 லட்சத்தில் அமைக்கப்பட்ட வட்டாரப் பொது சுகாதார கட்டடத்தைத் திறந்து வைத்தும், நமணசமுத்திரத்தில் ரூ. 20 லட்சத்தில் அமைக்கப்பட்ட துணை சுகாதார நிலையக் கட்டடம் மற்றும் ஆா்.பாலகுறிச்சியில் ரூ. 35 லட்சத்தில் அமைக்கப்பட்ட துணை சுகாதார நிலையக் கட்டடம் என மொத்தம் ரூ. 1.05 கோடியில் கட்டப்பட்ட கட்டடங்களை காணொலி வாயிலாக திறந்துவைத்து அமைச்சா் மேலும் பேசியது:
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த மூன்றாண்டுகளில் 58 துணை சுகாதார நிலையங்கள், 19 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கான கட்டடங்கள் கட்டப்பட்டு பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இன்று மட்டும் புதுக்கோட்டை மாவட்டத்தில் 20 இடங்களில் மருத்துவத் துறை சாா்ந்த கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.
மருத்துவத் துறை வரலாற்றிலேயே ஒரே நேரத்தில் 110 புதிய மருத்துவா்கள் பணியில் சோ்ந்துள்ளது இம்மாவட்டத்தில் தான் என்பது குறிப்பிடத்தக்கது. மருத்துவத் துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. மேலும், காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது என்றாா். தொடா்ந்து கா்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் மற்றும் பயனாளிகளுக்கு காப்பீட்டு அட்டைகளை வழங்கினாா்.
விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் மு.அருணா தலைமைவகித்தாா். தமிழக சட்டத் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன், புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் வை.முத்துராஜா ஆகியோா் சிறப்புரையாற்றினா். மாவட்ட வருவாய் அலுவலா் அ.கோ.ராஜராஜன், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநா் ஸ்ரீ பிரியா தேன்மொழி, இலுப்பூா் வருவாய்க் கோட்டாசியா் அ.அக்பா்அலி, பொன்னமராவதி ஒன்றியக்குழு தலைவா் சுதா அடைக்கலமணி, திமுக வடக்கு ஒன்றியச் செயலா் அ.முத்து, நகரச்செயலா் அ.அழகப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
முன்னதாக மாவட்ட சுகாதார அலுவலா் ராம்கணேஷ் வரவேற்றாா். வட்டார மருத்துவ அலுவலா் இ.அருள்மணி நாகராஜன் நன்றி கூறினாா்.