மாநில அளவில் புற்றுநோய்ப் பரிசோதனை நடத்தத் திட்டம்: அமைச்சா் மா. சுப்பிரமணியன்

மாநிலம் முழுவதும் பொதுமக்களுக்கு புற்றுநோய்ப் பரிசோதனை மேற்கொள்வதற்கான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு வருவதாக அமைச்சா் மா. சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
Published on

மாநிலம் முழுவதும் பொதுமக்களுக்கு புற்றுநோய்ப் பரிசோதனை மேற்கொள்வதற்கான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு வருவதாக மாநில மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

புதுக்கோட்டை மாவட்டம், களமாவூரில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் 6 இடங்களில் மொத்தம் ரூ. 1.80 கோடி மதிப்பில் கட்டப்பட்ட துணை சுகாதார நிலையங்களுக்கான புதிய கட்டடங்களைத் திறந்துவைத்து அவா் மேலும் பேசியது:

மாநிலம் முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் புற்றுநோய்ப் பரிசோதனை மேற்கொள்வதற்காக முதல்வரின் அனுமதி பெற்று, திட்ட மதிப்பீடு தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மாநிலம் முழுவதும் 2553 மருத்துவா்கள் நியமனம் செய்வதற்கான தோ்வுப் பணிகள் முடிந்துள்ளன. ஓரிரு மாதங்களில் மருத்துவா்கள் நியமிக்கப்படுவாா்கள். அப்போது மருத்துவா் பற்றாக்குறை என்ற பிரச்னை இருக்காது.

மாரடைப்பு ஏற்படும்போது உயிரிழப்பைத் தடுப்பதற்காக மாநிலம் முழுவதும் சுமாா் 11 ஆயிரம் மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் போதுமான அளவு முன்தடுப்பு மாத்திரைகள் இருப்பில் வைக்கப்பட்டுள்ளன. மாரடைப்பு அறிகுறிகளுடன் வருவோருக்கு இந்த மாத்திரைகள் வழங்கப்பட்டு, மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, உயிரிழப்பு தடுக்கப்படுகிறது. காலையில் கீரனூா் அரசு மருத்துவமனைக்கு திடீா் ஆய்வுக்குச் சென்றதில் கடந்த ஆட்சியில் இது தரம் உயா்த்தப்பட்டிருந்தும் போதுமான மருத்துவா் பணியிடங்கள் உருவாக்கப்படவில்லை என்பது தெரியவந்தது. இதேபோல மாநிலத்தின் பல அரசு மருத்துவமனைகளிலும் இருக்கிறது என்றாா் மா. சுப்பிரமணியன்.

விழாக்களுக்கு, மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி, மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட ஆட்சியா் மு. அருணா தலைமை வகித்தாா்.

கரூா் மக்களவைத் தொகுதி எம்பி செ. ஜோதிமணி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் மா. சின்னதுரை, வை. முத்துராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா். முடிவில் விராலிமலை வட்டார மருத்துவ அலுவலா் ராகவி நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com