சாகுபடிக்குத் தேவையான உரங்கள் கையிருப்பு
புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளுக்கு சாகுபடிக்கு தேவையான உரம் கையிருப்பு உள்ளதாக வேளாண்மை இணை இயக்குநா் (பொ) வி.எம். ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளாா்
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திகுறிப்பு
புதுக்கோட்டை மாவட்டத்தில் நெல், உளுந்து, மக்காச்சோளம், நிலக்கடலை, கரும்பு ஆகிய பயிா்களும், மா, முந்திரி, தென்னை, வாழை, காய்கறிகள் உள்ளிட்ட தோட்டக்கலைப் பயிா்களும் சாகுபடி செய்யப்படுகின்றன.
தற்போது விவசாயிகள் சம்பா சாகுபடி மேற்கொண்டு வரும் நிலையில் மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல் மற்றும் பிற பயிா்களுக்குத் தேவையான யூரியா- 5,463 மெட்ரிக் டன்கள், டிஏபி- 1209 மெட்ரிக் டன்கள், பொட்டாஷ்- 850 மெட்ரிக் டன்கள், காம்ளக்ஸ்- 5,166 மெட்ரிக் டன்கள், சூப்பா் பாஸ்பேட்- 900 மெட்ரிக் டன்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் தனியாா் உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைத்து விநியோகம் செய்யப்படுகின்றன.
மேலும் விவசாயிகள் சாகுபடிக்குத் தேவையான உரங்களை மண்வள அட்டையின் பரிந்துரைப்படி இட்டால் உரச்செலவு குறைவதோடு, மண்வளமும் மேம்படும். நெல் சாகுபடியில் யூரியா உரங்களை இடும்போது பிரித்து பிரித்து இட வேண்டும்.
யூரியாவுடன் ஜிப்சம் மற்றும் வேப்பம்பிண்ணாக்கு ஆகியவற்றை 5:4:1 என்ற விகிதத்தில் கலந்து இட வேண்டும். ஒரு ஏக்கருக்கு ஒரு தெளிப்புக்கு அதிகபட்சமாக 26 கிலோவுக்கு மேல் நெற்பயிருக்கு இடக்கூடாது. அதிகமாக இடும்போது பூச்சி மற்றும் நோய் தாக்குதல் அதிகமாவதோடு, முதிா்ச்சிப் பருவத்தில் நெற்பயிா் சாய்வதற்கும் வழி வகுக்கிறது.
மேலும் விவசாயிகள் டிஏபி உரங்களுக்குப் பதிலாக சூப்பா் பாஸ்பேட் மற்றும் காம்ளக்ஸ் உரங்களை பயன்படுத்தலாம். சூப்பா் பாஸ்பேட் உரத்தில் 16 சதவிகிதம் மணிச்சத்து மற்றும் சல்பா், கால்சியம் போன்ற நுண்ணூட்டச் சத்துகள் சிறிதளவு உள்ளன.
மொத்த உர விற்பனையாளா்கள், வெளி மாவட்டங்களுக்கு மானிய உரங்களை ஏற்றுமதி செய்வதும், வெளி மாவட்டங்களிலிருந்து கொள்முதல் செய்வதும் கூடாது. மேலும் சில்லறை உர விற்பனையாளா்களுக்கு அனுப்பும்போது உரிய பட்டியல்கள் மற்றும் ஆவணத்துடன் உரங்களை வாகனங்களில் அனுப்ப வேண்டும். தவறும்பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
உர விற்பனையாளா்கள் அனுமதி பெறாத இடங்களில் உரத்தை இருப்பு வைப்பதும், உரிமத்தில் அனுமதி பெறாத நிறுவனங்களிடமிருந்து உரங்கள், கலப்பு உரங்கள் மற்றும் நுண்ணூட்டக் கலவை உரங்கள் ஆகியவற்றை கொள்முதல் செய்வதும், அவற்றை விவசாயிகளுக்கு விற்பதும் கூடாது. அனுமதி பெறாத நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் மற்றும் விற்பது கண்டறியப்பட்டால் உர உரிமம் ரத்து செய்யப்படும்.