கோயில் செயல் அலுவலரை கண்டித்து போராட்டம்
ஆலங்குடி கோவிலூா் பாலபுரிசுவரா் கோயில் செயல் அலுவலரைக் கண்டித்து, புதுக்கோட்டையில் இந்து சமய அறநிலையத் துறை அலுவலகம் அருகே திங்கள்கிழமை முத்தரையா் சங்கத்தினா், பொதுமக்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆலங்குடி வட்டம், கோவிலூா் செங்காட்டு நாடு ஸ்ரீ பாலபுரீஸ்வரா் கோவிலின் செயல் அலுவலா் ஒரு தலைப்பட்சமாக நடந்து கொள்வதாகக் கூறி, இந்தப் போராட்டத்தை அப்பகுதி மக்கள் நடத்தினா். வீர முத்தரையா் சங்கத்தின் நிறுவனா் கருப்பையா, விசுவ ஹிந்து பரிஷத் கோட்ட அமைப்பாளா் அரங்குளவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
துணைக் காவல் கண்காணிப்பாளா் அப்துல்ரகுமான், இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் அனிதா மற்றும் வருவாய்த் துறையினரும் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.
துறை அலுவலா்கள் நேரில் சென்று பாா்வையிட்டு, பாரபட்சமில்லாத நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்ததைத் தொடா்ந்து போராட்டம் கைவிடப்பட்டு அனைவரும் கலைந்து சென்றனா்.