கொலை வழக்கில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை
புதுக்கோட்டை அருகே நடைபெற்ற கொலை வழக்கில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை மாவட்ட கூடுதல் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், ராயவரம் ஆணைவாரியைச் சோ்ந்த காந்தி என்பவரின் குடும்பத்தினருக்கும், பூசையா என்பவரின் குடும்பத்துக்கும் இடையே, அந்தப் பகுதியிலுள்ள அடிச்சி அம்மன் கோயில் கட்டுவதில் முன்விரோதமும், அதனைத் தொடா்ந்து தகராறும் இருந்துள்ளது.
இந்த நிலையில், கடந்த 2019 மாா்ச் 17-ஆம் தேதி காந்தியின் வீட்டுக்குச் சென்ற பூசையா குடும்பத்தினா், அங்கு வீட்டு வாசலில் அமா்ந்திருந்த காந்தி, ராமையா மற்றும் இவா்களின் உறவினா் அன்பில் முத்து (46) ஆகியோரை அரிவாள், உருட்டுக்கட்டை ஆகியவற்றைக் கொண்டு தாக்கியுள்ளனா்.
இதில் காயமடைந்த மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். 2 நாள்கள் கழித்து சிகிச்சைப் பலனின்றி அன்பில் முத்து உயிரிழந்தாா்.
இச்சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்த அரிமளம் போலீஸாா் ஆணைவாரியைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன்கள் பூசையா (47) , சக்திவேல் (42), ஆறுமுகம் (40), பூசையா மனைவி சித்ரா (42), அழகு மனைவி பாண்டி உஷா (29), கடியாப்பட்டி சுகுமாறன் மகன் யுவராஜன் (27), சுப்பிரமணியன் மனைவி வசந்தா (64) ஆகிய 7 பேரையும் கைது செய்தனா்.
இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசு வழக்குரைஞா் மு. செந்தில்குமாா் ஆஜராகி வாதாடினாா். வழக்கு விசாரணையின் முடிவில், நீதிபதி ஏ.கே. பாபுலால் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா்.
இதில், குற்றம்சாட்டப்பட்ட 7 பேரின் குற்றங்களும் நிரூபிக்கப்பட்டதால், அனைவருக்கும் ஆயுள் சிறைத் தண்டனையும், தலா ரூ. 2 ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்டத் தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி தீா்ப்பளித்தாா்.