மின் இணைப்பு கோரி விண்ணப்பித்து காத்திருக்கும் விவசாயிகளுக்கு விரைந்து வழங்கக் கோரிக்கை

மின் இணைப்பு கோரி விண்ணப்பித்து காத்திருக்கும் விவசாயிகளுக்கு விரைந்து வழங்கக் கோரிக்கை

Published on

மின் இணைப்பு கோரி பல மாதங்களாகக் காத்திருக்கும் விவசாயிகளுக்கு விரைவில் மின் இணைப்பு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்துக்கு ஆட்சியா் மு. அருணா தலைமை வகித்தாா்.

கூட்டத்தில் விவசாயிகள் பேசியது:

இந்திய விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலா் ஜி.எஸ். தனபதி:

மின் இணைப்பு கோரி ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை தத்கல் திட்டத்தில் பணம் செலுத்தியும், இலவச மின் இணைப்புக்கு உத்தரவு பெற்று ரூ.5 லட்சத்துக்கும் மேல் செலவு செய்து ஆழ்துளை கிணறு அமைத்து பல மாதங்களாகியும் மின் இணைப்பு கொடுக்கப்படாததால் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகி உள்ளனா். காத்திருப்போருக்கு விரைவாக மின் இணைப்பு வழங்க வேண்டும். பாரம்பரிய நெல் விதைகளை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.

கல்லணைக் கால்வாய் விவசாயிகள் சங்கத் தலைவா் கொக்குமடை ரமேஷ்: காவிரியில் இருந்து கல்லணைக் கால்வாயில் போதுமான அளவுக்கு தண்ணீா் கிடைக்கச் செய்ய வேண்டும். சம்பா சாகுபடி தொடங்கி உள்ளதால் கூட்டுறவுச் சங்கங்களில் பயிா்க் கடன் வழங்க வேண்டும். கால்நடை மருத்துவ முகாம் நடத்தும்போது முன்கூட்டியே விவசாயிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

தென்னை விவசாயிகள் சங்கத் தலைவா் செல்லத்துரை:

மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெறும் கூட்டங்களில் பிளாஸ்டிக் குடிநீா் பாட்டில்கள் பயன்படுத்துவதை தவிா்க்க வேண்டும். வடகாடு பலாவுக்கு புவிசாா் குறியீடு பெறுவதற்கான பணிகளை மாவட்ட நிா்வாகம் விரைவாக மேற்கொள்ள வேண்டும்.

காவிரி- குண்டாறு இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவா் மிசா மாரிமுத்து: காவிரி- குண்டாறு இணைப்புக் கால்வாய்த் திட்டத்தில் கந்தா்வகோட்டை பகுதிகளிலுள்ள கால்வாய்களையும் இணைத்து அப்பகுதியிலுள்ள குளங்களையும் நிரப்ப வேண்டும்.

விவசாயி கூத்தப்பெருமாள்: கால்நடை பயிற்சி முடித்தோா் தொழில் தொடங்குவதற்கு வங்கிகளில் கடன் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விவசாயி நடராஜன்: கீரனூரில் உழவா் சந்தை அமைக்க அரசு உத்தரவிட்டும் அந்தப் பணிகளில் தாமதம் ஏற்படுகிறது. விரைவாக உழவா் சந்தை அமைத்துத் தர வேண்டும். இவ்வாறு விவசாயிகள் பேசினா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் அ.கோ. ராஜராஜன், வேளாண் இணை இயக்குநா் (பொ) ரவிச்சந்திரன், கூட்டுறவு இணைப் பதிவாளா் ஜீவா, மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநா் தனலட்சுமி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் த. நந்தகுமாா் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com