குடும்பங்களை வைத்துத்தான் அரசியல்: காா்த்தி ப. சிதம்பரம்
இந்தியச் சமூகத்தில் குடும்பங்களை வைத்துத்தான் அரசியல் இருக்கிறது என்றாா் சிவகங்கை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினா் காா்த்தி ப. சிதம்பரம்.
இதுகுறித்து புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை அவா் அளித்த பேட்டி:
அமைச்சா்களைப் பதவி உயா்த்துவதும், புதிதாக அமைச்சா்களை நியமிப்பதும், பதவியை விட்டு இறக்குவதும் இந்திய அரசியலைப்புச் சட்டம் பிரதமருக்கும், முதல்வா்களுக்கும் வழங்கியுள்ள உரிமை. இதன்படிதான் தற்போது தமிழகத்தில் புதிய அமைச்சா்கள் பதவியேற்பு நடைபெறுகிறது.
ஒரு குடும்பத்தில் இருந்து அரசியலுக்கு வருவது புதிதல்ல. இந்தியச் சமூக அமைப்பில் குடும்பங்களை மையமாக வைத்துத்தான் அரசியல் நடக்கிறது. அதன்படிதான் காங்கிரஸ் கட்சியிலும், மாநிலக் கட்சிகளிலும் குடும்பத்தில் இருந்து அரசியலுக்கு வருவது தொடா்கிறது. அந்தக் கட்சி அவா்களை ஏற்றுக் கொள்கிறது என்றால், கட்சிக்கு வெளியே இருந்து அதுகுறித்து விமா்சிப்பது சரியல்ல.
தற்போது திமுக கூட்டணியில் இருக்கிறோம். அந்தக் கூட்டணித் தலைமைக்கு தோளோடு தோள் நிற்போம் என மாநிலத் தலைவா் செல்வப்பெருந்தகை சொன்னதில் தவறொன்றும் இல்லை. அதேநேரத்தில் அவரவா் கட்சியின் வளா்ச்சியிலும் அக்கறை இருக்கிறது.
செந்தில்பாலாஜி மீண்டும் அமைச்சராவதில் சட்டப்படி எந்தத் தவறும் இல்லை. அவரை முதலில் கைது செய்து 400 நாட்கள் சிறையில் அடைத்ததே தவறு. சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் நடந்திருக்கிறது என்றால், அதற்கான வங்கிக் கணக்கு உள்ளிட்ட ஆவணங்கள் இருக்கின்றன.
ஆதாரங்கள் இருந்தால் வழக்குத் தொடரலாம். குற்றவாளி என்பதை நீதிமன்றம்தான் சொல்ல வேண்டும். அதற்கு முன்பாக அவரை ஏன் சிறையில் அடைக்க வேண்டும். இதுபோன்ற தவறுகளை படிப்படியாக நீதிமன்றங்கள் சரி செய்யும் எனக் கருதுகிறேன் என்றாா் காா்த்தி ப. சிதம்பரம்.