புதுகை- தஞ்சை ரயில் தடம் அமைக்கக் கோரிக்கை
புதுக்கோட்டை- தஞ்சை இடையே புதிய ரயில் தடம் அமைக்க வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட வா்த்தகக் கழகம் தீா்மானம் நிறைவேற்றியுள்ளது.
புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வா்த்தகக் கழகத்தின் 50ஆம் ஆண்டு பொன் விழா மற்றும் 2024ஆம் ஆண்டுப் பொதுக்குழுக் கூட்டத்தில்
புதுக்கோட்டை- தஞ்சை இடையே புதிய ரயில் தடம் அமைக்க வேண்டும். கந்தா்வகோட்டை ஊராட்சியை பேரூராட்சியாக்க வேண்டும். திருவப்பூரில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும். ஆலங்குடி பகுதிகளில் விளையும் விவசாய விளை பொருட்களைப் பாதுகாக்க குளிா்ச்சாதன வசதியுடன் கூடிய கிட்டங்கி அமைக்க வேண்டும்.
கீரனூா் பகுதியில் மகிமை வசூல் செய்யப்படுவதைக் கட்டுப்படுத்த வேண்டும். புதுக்கோட்டை- அன்னவாசல் வழித்தடத்தில் இரவு நேரத்தில் சமூக விரோதிகள் வழிப்பறி செய்வதை காவல்துறையினா் தடுக்க வேண்டும். புதுக்கோட்டை நகரிலுள்ள சமத்துவபுரம் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்குச் செல்ல போதுமான பேருந்து வசதி செய்ய வேண்டும்.
புதுக்கோட்டை நகரில் மச்சுவாடி, சீனிவாசா நகா், இந்திரா நகா், தைலாநகா், தஞ்சை சாலை பகுதிகளில் 25 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீா் விநியோகம் செய்யும் நிலையை மாற்றி, குறைந்தபட்சம் 3 நாட்களுக்கு ஒரு முறை விநியோகிக்க வேண்டும்.
காரைக்குடி செல்லும் அனைத்துப் பேருந்துகளும் திருமயம் நகருக்குள் சென்று திரும்ப வேண்டும். இரவு நேரங்களில் புறவழிச்சாலையிலேயே பயணிகளை இறக்கிச் செல்வதை போக்குவரத்துத் துறை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாகவும், போக்குவரத்துக்கு இடையூறாகவும் செல்லும் இருசக்கர வாகனங்களைக் கட்டுப்படுத்த, நகருக்குள் வாகனங்களின் வேகக் குறைப்பை அமல்படுத்த வேண்டும்.
மாவட்டம் முழுவதும் நெடுஞ்சாலைகளிலுள்ள வேகத்தடைகளில் வெள்ளை அடித்தும், இரவு நேரங்களில் தெரியும் வகையில் ரேடியம் ஒட்டிகளை ஒட்டியும் விபத்துகளைத் தடுக்க வேண்டும். புதுகை நகரில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித் திரியும் மாடுகள், நாய்களைக் கட்டுப்படுத்த வேண்டும். புதுக்கோட்டையில் ஷோ் ஆட்டோ விடுவதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிா்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட தீரமானங்கள் நிறைவேற்றப்பட்டன.
புதிய நிா்வாகிகள் தோ்வு: மாவட்ட வா்த்தகக் கழகத் தலைவராக எம். சாகுல்ஹமீது, செயலராக எஸ். கதிரேசன், பொருளாளராக கே.எல்.கே.ஏ. ராஜா முகமது ஆகியோா் ஒருமனதாகத் தோ்வு செய்யப்பட்டனா்.
விழாவுக்கு கழகத் தலைவா் எம். சாகுல்ஹமீது தலைமை வகித்தாா். தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவா் ஏ.எம். விக்கிரமராஜா, பொதுச்செயலா் வீ. கோவிந்தராஜுலு, புதுக்கோட்டை மாநகராட்சி மேயா் செ. திலகவதி உள்ளிட்டோரும் பேசினா். மாவட்ட கூடுதல் செயலா் ரா. சம்பத்குமாா் தொகுத்து வழங்கினாா்.