தையல் தொழிலாளா்களுக்கு மானிய மின்சாரம் தரக் கோரிக்கை
கடை வைத்து தொழில் செய்து வதும் தையல் தொழிலாளா்களுக்கு மானியக் கட்டணத்தில் மின்சாரம் வழங்க வேண்டும் என சிஐடியு தையல் தொழிலாளா்கள் ஆட்சியரகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளனா்.
புதுக்கோட்டை மாவட்ட தையல் தொழிலாளா் சங்கப் பொதுச் செயலா் சி. மாரிக்கண்ணு தலைமையில் அளிக்கப்பட்டுள்ள மனுவில், மாவட்டம் முழுவதும் ஆயிரக்கணக்கான தொழிலாளா்கள் கடை வைத்து தையல் தொழில் செய்து வருகின்றனா். இவா்கள் தங்களது தொழிலை நடத்துவதற்கு பல்வேறு வகைகளில் சிரமப்பட்டு வருகின்றனா்.
தையல் கடைகளுக்கு மானியக் கட்டணத்தில் மின்சாரம் வழங்க வேண்டும். சுய தொழிலாக தையல் தொழில் இருக்கிறது என்பதைக் கவனத்தில் கொண்டு மூலப் பொருள்களுக்கான ஜிஎஸ்டி உள்ளிட்ட அனைத்து விதமான வரிகளையும் கைவிட வேண்டும்.
புதிய எலக்ட்ரானிக் தையல் இயந்திரம் வாங்குவதற்கும், தையல் தொழிலையும், தொழிலாளா்களையும் பாதுகாக்கவும் மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் வழங்க வேண்டும்.
தனியாா் பள்ளிகளில் பள்ளிச் சீருடைகளை அவா்களே தைத்துக் கொடுப்பதை கைவிட்டு வாரியத்தின் மூலமாக தைத்துக் கொடுப்பதை உறுதிப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.