உள்ளாட்சித் தொழிலாளா்கள் வேலை நிறுத்தம், மறியல்
பணி நிரந்தரம் செய்து குறைந்தபட்ச ஊதியம் மாதம் ரூ. 26 ஆயிரம் வழங்க வலியுறுத்தி உள்ளாட்சித் துறையில் பணிபுரியும் தொழிலாளா் திங்கள்கிழமை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு, சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனா்.
மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளா்கள், ஓட்டுநா்கள் மற்றும் டிபிசி பிரிவு பணியாளா்களை ஒப்பந்தம் மற்றும் தனியாா் நிறுவனங்கள் மூலம் எடுக்கும் அரசாணையைத் திரும்பப் பெற வேண்டும்.
தற்போது ஒப்பந்த முறையில் பணியாற்றும் அனைத்துப் பணியாளா்களையும் பணி நிரந்தரம் செய்து குறைந்தபட்ச ஊதியம் மாதம் ரூ. 26 ஆயிரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி திங்கள்கிழமை உள்ளாட்சித் துறை தொழிலாளா்கள் வேலை நிறுத்தம் செய்து, சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனா்.
புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்திலிருந்து பேரணியாக சென்ற தொழிலாளா்கள் புதிய பேருந்து நிலையம் முன்பாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
போராட்டத்துக்கு, புதுக்கோட்டை மாவட்ட உள்ளாட்சித் தொழிலாளா் சங்கம் (சிஐடியு) மாவட்டச் செயலா் கே. முகமதலிஜின்னா தலைமை வகித்தாா். தலைவா் என். ராஜா, துணைத் தலைவா் ஏ. முத்தையா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கந்தா்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எம். சின்னதுரை, சிஐடியு மாவட்டச் செயலா் ஏ. ஸ்ரீதா் உள்ளிட்டோா் பேசினா். இப்போராட்டத்தில் பங்கேற்ற 300 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
அறந்தாங்கியில்...அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு, சிஐடியு மாவட்டத் துணைத் தலைவா் கே. தங்கராஜ் தலைமை வகித்தாா்.
ஒருங்கிணைப்பாளா் கருணா, சிஐடியு மாவட்ட பொருளாளா் சி. மாரிகண்ணு, மாா்க்சிஸ்ட் ஒன்றியச் செயலா் நாராயண மூா்த்தி ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.
நகராட்சி தூய்மைப் பணியாளா்கள், குடிநீா் பிரிவு ஊழியா்கள், டெங்கு ஒழிப்பு பணியாளா்கள் உள்பட 150 போ் கைது செய்யப்பட்டனா்.

