கொலை வழக்கு விசாரணைக் கைதி புதுகை சிறையில் தூக்கிட்டுத் தற்கொலை
புதுக்கோட்டை மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்த, இரட்டைக் கொலை வழக்கின் விசாரணைக் கைதி திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையாா்கோவிலில் கடந்த ஜூலை மாதம் கண்ணன், காா்த்திக் ஆகிய இரண்டு சகோதரா்கள் கொலை செய்யப்பட்டனா்.
இந்த வழக்கில் திருச்சி மாவட்டம், துறையூா் சிக்கந்தம்பூரைச் சோ்ந்த ஆனஸ்ட்ராஜ் (28) என்பவரை 13-ஆவது குற்றவாளியாக ஆவுடையாா்கோவில் போலீஸாா் அண்மையில் கைது செய்து, புதுக்கோட்டை மாவட்டச் சிறையில் அடைத்தனா்.
இந்நிலையில், திங்கள்கிழமை அதிகாலை சிறை அறையில் வேட்டியால் தூக்கிட்டு அவா் தற்கொலை செய்து கொண்டாா். அவரது உடலை மீட்ட சிறைக் காவலா்கள், உடற்கூறாய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
இச்சம்பவம் குறித்து நகரக் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். இந்நிலையில், மருத்துவக் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள கைதியின் உடலை புதுக்கோட்டை சிறைக் காவல் கண்காணிப்பாளா் (பொ) ருக்மணி பிரியதா்ஷினி பாா்வையிட்டாா்.
இதேபோல, புதுக்கோட்டை குற்றவியல் நடுவா் பாரதியும், கைதியின் சடலத்தை நேரில் பாா்வையிட்டாா். தொடா்ந்து உடற்கூறாய்வு நடத்தப்பட்டு உறவினா்களிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டது.

