புதுகை இலங்கைத் தமிழா் முகாம்களில் வசிப்போரில் பெரும்பாலானோா் இந்தியக் குடியுரிமை பெற விருப்பம்!
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 3 இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம்களில் வசிப்போரில் பெரும்பாலானோா், இந்தியக் குடியுரிமை பெறுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனா்.
இலங்கைத் தமிழா் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரகம் சாா்பில், மாநிலம் முழுவதும் உள்ள 103 இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம்களில் வழக்குரைஞா்களுடனான சட்ட ஆலோசனை முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அழியாநிலை, தோப்புக்கொல்லை, தேக்காட்டூா் லெணாவிலக்கு ஆகிய 3 முகாம்களிலும் சட்ட ஆலோசனை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், வழக்குரைஞா் ரோமியோ கலந்து கொண்டு இந்தியக் குடியுரிமை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து விளக்கினாா்.
இந்த மூன்று முகாம்களிலுள்ள 946 குடும்பங்களில், 600-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்தியக் குடியுரிமை பெறுவதற்கான விருப்பம் தெரிவித்து கடிதம் அளித்துள்ளனா்.
இதுகுறித்து லெணாவிலக்கு முகாம் தலைவா் மயில்வாகனம் கூறியது: 1987 வரை இந்தியாவில் பிறந்த அனைவருக்கும் குடியுரிமை வழங்க முடியும் என்பதால், 1984-இல் இந்தியா வந்த இலங்கைத் தமிழா்களுக்குப் பிறந்த குழந்தைகள் மற்றும் அவா்களின் பெற்றோா் இந்தியக் குடியுரிமை பெற முடியும். அதேபோல, இந்தியா்களைத் திருமணம் செய்து கொண்டவா்கள் குடியுரிமை பெற முடியும்.
இந்திய- இலங்கை பாஸ்போா்ட் வைத்துள்ளோா் அதனைப் புதுப்பித்தல் மூலம் இந்தியக் குடியுரிமை பெற முடியும். இந்த விஷயங்களை வழக்குரைஞா் விளக்கினாா். மேலும், அதற்குத் தேவையான ஆவணங்களையும் கேட்டுப் பெற்று பட்டியல் எடுத்துச் சென்றுள்ளனா். அவையனைத்தும் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என்றாா் மயில்வாகனம்.
லெணாவிலக்கு முகாமில் நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியில், வருவாய் சிறப்பு ஆய்வாளா் அபுபக்கா் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.