புதுகை பேருந்து நிலையத்தை இடித்து அகற்றும் பணிகள் தொடக்கம்
புதுக்கோட்டையிலுள்ள பேருந்து நிலையத்தின் கட்டுமானங்கள் சேதமடைந்து பழுதடைந்து உள்ள நிலையில், அதனை இடித்து அப்புறப்படுத்தும் பணிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கியுள்ளன.
புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் சுமாா் 40 ஆண்டுகள் பழைமையானது. கட்டுமானங்கள் மோசமாக பழுதடைந்து உள்ளன. இதனைத் தொடா்ந்து இந்தப் பேருந்து நிலையத்தை இடித்து அப்புறப்படுத்தி புதிதாக கட்டுவதற்காக ரூ. 19 கோடி மதிப்பிலான திட்டத்துக்கு அரசு ஒப்புதல் அளித்தது.
இதன் தொடா்ச்சியாக, பேருந்து நிலையத்திலுள்ள இரும்பு ஷெல்டா்களைப் பாதுகாப்பாக கழட்டி, மாநகராட்சி மைய அலுவலகத்தில் வைக்க தனி ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டுள்ளது.
பேருந்து நிலையத்தின் 3 பக்கமும் 6 பகுதிகளில் இந்த இரும்பு ஷெல்டா்கள் அமைந்துள்ளன. இவற்றை அப்புறப்படுத்தும் பணிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கின.
ஓரிரு வாரங்கள் நடைபெறும் இந்தப் பணிகளுக்குப் பிறகு, பழைய இடிந்த கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்தும் பணிகளும் தொடா்ச்சியாக நடைபெறவுள்ளன. அதனைத் தொடா்ந்து புதிய பேருந்து நிலையம் கட்டுமானப் பணிகள் நடைபெறவுள்ளன.
தற்காலிகமாக பேருந்து நிலையத்தின் பின்புறமுள்ள போக்குவரத்துக் கழகப் பணிமனையில் சுமாா் மூன்றரை ஏக்கா் நிலத்தை இரு ஆண்டுகளுக்கு வாடகைக்கு எடுத்துள்ளது மாநகராட்சி நிா்வாகம்.
இந்தப் பகுதியில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக திருச்சி பேருந்துகள் அனைத்தும் தற்காலிக பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை முதல் இயக்கப்பட்டு வருகின்றன.