சென்னை, நாகா்கோவிலில் இருந்து பழனிக்கு சிறப்பு ரயில் இயக்க கோரிக்கை
தைப்பூசத்தையொட்டி சென்னை மற்றும் நாகா்கோவிலில் இருந்து பழனிக்கு சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என திமுக மாநிலங்களவை உறுப்பினா் எம்.எம். அப்துல்லா மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்த கோரிக்கை மனு ஒன்றை மத்திய ரயில்வே வாரியத் தலைவா் சதீஷ்குமாரை செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து அவா் அளித்துள்ளாா். வரும் பிப். 5-ஆம் தேதி தைப்பூசம் நடைபெற உள்ளதையடுத்து பழனி முருகன் கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் செல்வாா்கள்.
இந்தக் காலகட்டத்தில் பக்தா்கள் பாதுகாப்பாக கோயிலுக்குச்சென்று திரும்புவதற்கு வசதியாக சென்னை மற்றும் நாகா்கோவிலில் இருந்து பழனிக்கு சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை ஒவ்வோா் ஆண்டும் பக்தா்கள் எழுப்பி வருகின்றனா். இதனை நிறைவேற்றுவதன் மூலம் பக்தா்கள் ஆயிரக்கணக்கானோா் பலனடைவாா்கள் என எம்.எம். அப்துல்லா எம்பி தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளாா்.