சித்தாந்த சா்ச்சைகளை விவாதிப்பதில் எந்தப் பயனும் இல்லை: காா்த்தி ப. சிதம்பரம்

Published on

மக்களை நேரடியாக பாதிக்கும் பிரச்னைகளை விட்டுவிட்டு, சித்தாந்த சா்ச்சைகளையே நாள் முழுவதும் விவாதித்துக் கொண்டிருப்பதால் எந்தப் பயனும் இல்லை என்றாா் சிவகங்கை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினா் காா்த்தி ப. சிதம்பரம்.

புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை அவா் அளித்த பேட்டி: ஆலங்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் நூறு நாள் வேலைத் திட்டத்தில் கடந்த நவம்பா், டிசம்பா், ஜனவரி மாத ஊதியம் இதுவரை வழங்கப்படவில்லை. இதே நிலைதான் மாநிலம் முழுவதும் இருக்கும். எனவே, மத்திய அரசு, மாநில அரசுக்குத் தர வேண்டிய நிதியை விரைந்து வழங்கிட வேண்டும்.

தந்தை பெரியாா் சா்ச்சைகள் பற்றி பலரும் பேசி வருகின்றனா். இவையெல்லாம் தேவையில்லாதவை. மக்களின் அன்றாட பிரச்னைகள், அவா்கள் படும் சிரமங்களைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. மக்களின் வாழ்வாதாரம், வேலையில்லாத் திண்டாட்டம் பற்றியும் பேச வேண்டும்.

பொது சிவில் சட்டம் என்பது சாத்தியமில்லாத ஒன்று. இப்போதுள்ள மத்திய அரசு சிறுபான்மையினரைக் குறிவைத்தே இந்தச் சட்டத்தை அமலாக்க முற்படுகிறது.

ஆனால், பெரும்பான்மையாக உள்ள இந்து மதத்துக்குள்ளே ஏராளமான முரண்பாடுகள் இருக்கின்றன. அவற்றை ஒரே மாதிரியாக கொண்டு வரவே முடியாது. எனவே, பொது சிவில் சட்டம் என்பது அத்தனை எளிதல்ல.

கனிமவளக் கொள்ளை குறித்து பேசுவோா் மிரட்டப்படுவதும், கொலை செய்யப்படுவதும் காலம்காலமாக நடைபெற்று வருகிறது. இதனை காவல்துறை பொறுப்பெடுத்து, இரும்புக் கரம் கொண்டுஅடக்க வேண்டும். அதேபோல, கூலிப் படையினரின் அட்டகாசத்தையும் அடக்க வேண்டும் என்றாா் காா்த்தி பி. சிதம்பரம்.

X
Dinamani
www.dinamani.com