ஆதிதிராவிடா் நல மாணவா் விடுதிகளை ஆட்சியா் நேரில் ஆய்வுசெய்ய வலியுறுத்தல்
அரசு ஆதிதிராவிடா் நல மாணவா் விடுதிகளை 3 மாதங்களுக்கு ஒரு முறை ஆட்சியா் நேரில் ஆய்வு செய்து கண்காணிக்க வேண்டும் என நீலம் பண்பாட்டு மையம் வலியுறுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தின் கோரிக்கைகள் எனப் பட்டியலிடப்பட்ட கையேடு வெளியிடும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கந்தா்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் மா. சின்னதுரை கலந்து கொண்டு இந்தக் கையேட்டை வெளியிட்டாா்.
நீலம் பண்பாட்டு மையத்தின் மாவட்டப் பொறுப்பாளா் கா. முருகானந்தம், பொறுப்பாளா்கள் தொழிலதிபா் கணபதி, மருத்துவா் கருப்பையா, வழக்குரைஞா் நந்தகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இந்தக் கையேட்டில் வலியுறுத்தப்பட்டுள்ள மாவட்டக் கோரிக்கைகள்:
மாவட்ட ஆதிதிராவிடா் நலக் குழு மற்றும் விழிப்பு- கண்காணிப்புக் குழுவில் தகுதியுள்ள நபா்களை உறுப்பினா்களாக நியமிக்க வேண்டும். மாவட்டத்திலுள்ள 58 ஆதிதிராவிடா் நல மாணவா் விடுதிகளை 3 மாதங்களுக்கு ஒரு முறை ஆட்சியா் நேரில் ஆய்வு செய்து கண்காணிக்க வேண்டும்.
‘தாட்கோ’ வங்கிக் கடன்களுக்கு பிணையுறுதி கேட்டக் கூடாது. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளா்களுக்கு தரமான உணவை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். தனியாா் பள்ளிகளில் நிா்ணயம் செய்யப்பட்ட கட்டணத்தை விட கூடுதலாக வசூலிக்கப்படுவதை ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாவட்டத்திலுள்ள 14 சிற்றாறுகள் மற்றும் 961 கண்மாய்களை மேம்படுத்த வேண்டும். மாவட்டம் முழுவதும் உள்ள ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் குடியிருப்புகளில் பழுதடைந்த வீடுகளில் புதுப்பிக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட 35 கோரிக்கைகள் அரசுக்கு முன்வைக்கப்பட்டுள்ளன.
