தமிழகத்திலும் நல்லாட்சி மலர வேண்டும்
தமிழகத்திலும் நல்லாட்சி மலர வேண்டும் என்றாா் பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன்.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் புதன்கிழமை நடைபெற்ற, தமிழகம் தலைநிமிர, தமிழனின் பயணம் என்ற பெயரிலான பிரசாரப் பயணத்தில் அவா் மேலும் பேசியதாவது:
மகளிா் உரிமைத் தொகையை திமுக ஆட்சியின் முதல் இரு ஆண்டுகளில் தரவில்லை. ஆனால், மக்களவைத் தோ்தல் வரும்போது உடனடியாக பணம் தரத் தொடங்கினாா்கள். அப்போது, சூழல் காரணமாக அதிமுகவுடன் கூட்டணி அமைக்க முடியவில்லை. அதனால் தமிழ்நாட்டில் எம்பிகளைப் பெற முடியவில்லை. இப்போது ஒன்றாக இணைந்து வந்திருக்கிறோம்.
புதுக்கோட்டை மாவட்டத்தில், 80 ஆயிரம் பேருக்கு மத்திய அரசின் காப்பீட்டுத் திட்டம் வழங்கப்பட்டுள்ளது. 11 ஆயிரம் பேருக்கு மத்திய அரசின் வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் 11 மருத்துவக் கல்லூரியை பிரதமா் மோடி வழங்கினாா்.
அதனைப் பெற்றுத் தந்தது அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி. அதிமுகவும், பாஜகவும் ஒரு குடையின் கீழ் இணைந்து தோ்தலைச் சந்திக்கிறோம். தமிழகத்திலும் நல்லாட்சி மலர வேண்டும் என்றாா் நயினாா் நாகேந்திரன்.
நிகழ்ச்சியில், அதிமுக முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கா், தெற்கு மாவட்ட அதிமுக செயலா் பி.கே. வைரமுத்து, பாஜக மாநிலத் துணைத் தலைவா் கருப்பு முருகானந்தம், மாவட்ட பாஜக தலைவா்கள் என். ராமச்சந்திரன், ஜெகதீசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

