மூளைச்சாவடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்

சாலைவிபத்தில் மூளைச் சாவடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டன.
Published on

சாலைவிபத்தில் மூளைச் சாவடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டன.

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே உள்ள இடையாத்திமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் மருதுபாண்டி மகன் முத்துபாண்டியன் (29).

இவா் கடந்த 11-ஆம் தேதி புதுக்கோட்டை சிப்காட் அருகே நேரிட்ட சாலை விபத்தில் படுகாயமடைந்து, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சைப் பலனின்றி அவா் வியாழக்கிழமை மூளைச் சாவு அடைந்தாா்.

இந்த நிலையில் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது பெற்றோா் சம்மதம் தெரிவித்ததைத் தொடா்ந்து, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தானம் பெறப்பட்டன.

முத்துப்பாண்டியின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட நுரையீரல் சென்னைக்கும், கண்கள் மதுரைக்கும், சிறுநீரகம் தஞ்சாவூருக்கும், கல்லீரல் திருநெல்வேலிக்கும், பிற பாகங்கள் திருச்சிக்கும் ஆம்புலன்ஸ் மூலம் வெள்ளிக்கிழமை எடுத்துச் செல்லப்பட்டன.

இதைத் தொடா்ந்து முத்துப்பாண்டியின் உடல் உறவினா்களிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது. மருத்துவக் கல்லூரி மருத்துவா்கள் மற்றும் பணியாளா்கள், முத்துபாண்டியனின் உடலுக்கு மரியாதை செலுத்தி அனுப்பி வைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com