புதுகை ஆட்சியரகத்தில் விவசாயி தற்கொலை முயற்சி

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த விவசாயி, திடீரென பையில் இருந்து மண்ணெண்ணெய் பாட்டிலை எடுத்ததால் பரபரப்பு
Published on

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த விவசாயி, திடீரென பையில் இருந்து மண்ணெண்ணெய் பாட்டிலை எடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை அருகே சின்னையாசத்திரத்தைச் சோ்ந்தவா் ராமலிங்கம் மகன் செல்வமணி. விவசாயியான இவா், தனக்குச் சொந்தமான நிலத்தின் பட்டா வேறு ஒருவரின் பெயரில் உள்ளது. அதை தனது பெயருக்கு மாற்றித் தருமாறு வருவாய்த் துறை அலுவலகத்தில் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி புகாா் அளிக்க திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வந்தாா்.

மனுக்களைப் பெறும் அரங்கில் நின்றுகொண்டு செல்வமணி, தனது பையில் இருந்து மண்ணெண்ணெய் பாட்டிலை வெளியே எடுத்தபோது, அங்கிருந்த காவலா்கள் பாட்டிலை கைப்பற்றி விசாரித்தனா். அதில், பட்டாவில் தனது பெயரை மாற்றித் தர வருவாய்த் துறை அலுவலா்கள் மறுப்பதாக அவா் கூறினாா்.

இதுகுறித்த மனுவைப் பெற்றுக் கொண்ட அதிகாரிகள், நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து அவரை அனுப்பி வைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com